UPDATED : அக் 14, 2026 03:52 AM
ADDED : அக் 14, 2026 01:49 AM

ஒடிஷா வாலிபரிடம் பணம் பறித்த திருநங்கை கைது
புழல்: ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்த அபுதாஹிர், 24, புழல், தாளமுத்து தெருவில் தங்கி கட்டடப்பணி செய்து வருகிறார். கடந்த 11ம் தேதி இரவு, புழல் கேம்ப் சந்திப்பில், அவரை ஆசீர்வாதம் செய்வதாகக் கூறி, 2,400 ரூபாயை பறித்து சென்ற, வியாசர்பாடி, சாஸ்திரி நகரைச் சேர்ந்த கனிஷ்கா, 18, என்ற திருநங்கையை, புழல் போலீசார் கைது செய்து நேற்று சிறையில் அடைத்தனர்.
காணாமல் போன பெண் சடலமாக மீட்பு
சென்னை: பள்ளிக்கரணை, மயிலை பாலாஜி நகரைச் சேர்ந்த விஜயா, 55, கடந்த 8ம் தேதி மகள் காயத்திரியுடன், மயிலாப்பூர் ரயில் நிலைய கழிப்பறைக்குச் சென்றவர் மாயமனார். இந்நிலையில், ரயில் நிலையத்தில் பயன்பாடற்ற அறை அருகே விஜயாவின் அழுகிய உடலை போலீசார் மீட்டனர். கழிப்பறை பூட்டியிருந்ததால், வேறு இடத்திற்கு சென்றபோது தவறி விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது. உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
கொலை வழக்கு சாட்சிக்கு மிரட்டல்
நொளம்பூர்: முகப்பேர் மேற்கு, கர்ணன் தெருவைச் சேர்ந்த ராம்செந்தில், 38, கட்டட தொழிலாளி. இவர், எதிர் வீட்டில் வசிக்கும் சுகுமார், அவரது மகன்கள் மாறன், ராகுல் ஆகியோர் மீது, கடந்த ஆண்டு பதிவான கொலை வழக்கில் முக்கிய சாட்சியாக உள்ளார். நீதிமன்றத்தில் சாட்சி கூறினால், அவரையும், சகோதரர் பிரகாஷையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாக புகார் அளித்தார். நொளம்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
கேலி செய்து தாக்கி கொண்ட 9 பேர் கைது
பூக்கடை: பிராட்வே, தேவராஜ் முதலி தெருவில் சாலையோரம் வசிக்கும் சுமைதுாக்கும் தொழிலாளர்களான ரிஷி, 24, மணி, 30, சதீஷ், 28, மணிகண்டன், 32, சாமுவேல், 23, மற்றும் சஞ்சய், 23, சக்திவேல், 22, அப்புன், 24, சதீஷ், 23, ஆகியோர் இரு அணிகளாக பிரிந்து கேலி செய்த விவகாரத்தில் நேற்று முன்தினம் இரவு வாக்குவாதம் ஏற்பட்டு, இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். பூக்கடை போலீசார், ஒன்பது பேரையும் கைது செய்து நேற்று சிறையில் அடைத்தனர்.
ரயிலில் ரூ.1.75 லட்சம் கஞ்சா பறிமுதல்
எழும்பூர்: எழும்பூர் ரயில் நிலையத்தில், ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சுனில்குமார் தலைமையில் போலீசார் நேற்று சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஹவுரா – திருச்சி விரைவு ரயில் பொது பெட்டியில் கேட்பாரற்று கிடந்த பையை சோதனையிட்டனர். அதில், 1.75 லட்சம் ரூபாய் சர்வதேச சந்தை மதிப்புள்ள 3.5 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. கஞ்சாவைக் கடத்தியவர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
