UPDATED : அக் 08, 2026 10:00 AM
ADDED : அக் 03, 2026 05:44 PM
கோட்டூர்புரம்: கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆஷிக், 22; அடையாறு புற்றுநோய் மையத்தில் தொழில்முறை பயிற்சி பெற்று வருகிறார். கடந்த 1-ம் தேதி இரவு, விடுதியில் அவரது மொபைல்போன் திருடுபோனது. விசாரித்த கோட்டூர்புரம் போலீசார், திருட்டில் ஈடுபட்ட திருவல்லிக்கேணியைச் சேர்ந்த பார்த்தசாரதி, 19, மற்றும் 16 வயது சிறுவனை, நேற்று கைது செய்தனர்; இரண்டு மொபைல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
* சாஸ்திரி நகர்: பெசன்ட் நகர், ஓடைக்குப்பத்தில் வீட்டின் வெளியே நேற்று முன்தினம் படுத்து துாங்கி கொண்டிருந்த தீனா, 29, என்பவரின் மொபைல் போன்களை, இருவர் திருட முயன்றனர். அவர்களை உறவினர்கள் உதவியுடன் தீனா துரத்தி பிடித்து, சாஸ்திரி நகர் போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில், மடுவாங்கரையைச் சேர்ந்த சஜின்குமார், 25, முத்துகருப்பன், 27, என தெரிந்தது. இருவரும் நேற்று சிறையில் அடைக்கப்பட்டனர்.
மது பாட்டிலால் வாலிபரின் மண்டை உடைப்பு
அசோக் நகர்: திருவல்லிக்கேணி பழனியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல், 25; டிரம்ஸ் கலைஞர். கடந்த 1-ம் தேதி மேற்கு மாம்பலம், தம்பையா சாலையில் உள்ள 'டாஸ்மாக்' மதுக்கடையில் மது அருந்தினார். அங்கு இவரிடம் பீடி கேட்டு, கோடம்பாக்கத்தைச் சேர்ந்த பிரசாந்த், 26, அஜித்குமார், 26, ஆகியோர் தகராறு செய்து, கையாலும் மது பாட்டிலாலும் சக்திவேலின் தலையில் தாக்கி தப்பினர். விசாரித்த அசோக்நகர் போலீசார், இருவரையும் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
அஸ்ஸாம் வாலிபரிடம் வழிப்பறி: ஒருவர் கைது
அரும்பாக்கம்: அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் சாமிம் உத்தின், 29; அரும்பாக்கத்தில் உள்ள டீக்கடையில் பணிபுரிகிறார். நேற்று முன்தினம் அதிகாலை அரும்பாக்கம் மெகா மார்ட் பேருந்து நிறுத்தம் அருகே நடந்து சென்ற அவரை, பைக்கில் வந்த மூவர் வழிமறித்து தாக்கி, 5,000 ரூபாய் பறித்துச் சென்றனர். புகாரில், அமைந்தகரையைச் சேர்ந்த ஷியாம், 21, என்பவரை அரும்பாக்கம் போலீசார் நேற்று கைது செய்தனர். தலைமறைவாக உள்ள இருவரை தேடி வருகின்றனர்.
