/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மண் வடிகட்டியின் இரும்பு சட்டம் சேதம்:புதிதாக அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
/
மண் வடிகட்டியின் இரும்பு சட்டம் சேதம்:புதிதாக அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
மண் வடிகட்டியின் இரும்பு சட்டம் சேதம்:புதிதாக அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
மண் வடிகட்டியின் இரும்பு சட்டம் சேதம்:புதிதாக அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
ADDED : செப் 15, 2025 11:50 PM

கிளாம்பாக்கம்:கிளாம்பாக்கம் பேருந்து முனையம் நுழைவாயில் அருகே, மழைநீர் வடிகால் மீது பொருத்தப்பட்டுள்ள மண் வடிகட்டியின் இரும்பு சட்டம் உடைந்துள்ளதால், புதிதாக அமைக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வண்டலுார் உயிரியல் பூங்கா சந்திப்பிலிருந்து, செங்கல்பட்டு மார்க்கமாக செல்லும் ஜி.எஸ்.டி., சாலையில், கிளாம்பாக்கம் பேருந்து முனையம் உள்ளது.
பேருந்து முனையம் அமைக்கப்படும் போது, சாலை மற்றும் பேருந்து முனையத்தின் உள்ளே மழைநீர் தேங்காமல் இருக்க, ஜி.எஸ்.டி., சாலையோரம், மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டது.
மழைநீருடன் கலந்து வரும் மண், வடிகால் உள்ளே சேர்ந்து படுகைகளாக மாறி, நீரோட்டத்தை தடுக்கும். இதனால், மழைநீர் வடிகால் மேல் பகுதியில், மண் வடிகட்டிகள் அமைக்கப்பட்டு, அவற்றின் மேல், இரும்பு சட்டங்கள் பொருத்தப்பட்டன.
இந்த இரும்பு சட்டங்களை நீக்கி, வடிகால் உள்ளே தேங்கியிருக்கும் மணல் படுகைகளை அகற்றி, மீண்டும் இரும்பு சட்டத்தை அதன் மேல் பொருத்துவது வழக்கம்.
இதில் தற்போது, ஒரு மண் வடிகட்டியின் இரும்பு சட்டம், 40 நாட்களுக்கு முன் உடைந்து, பள்ளம் ஏற்பட்டது.
இரவு நேரத்தில், வடிகட்டியின் இரும்பு சட்டம் உடைந்திருப்பது தெரியாமல், இருசக்கர வாகன ஓட்டிகள் பலர் அதனுள் சிக்கி, காயமடைந்து வருகின்றனர்.
இதனால் பெரும் விபத்து நடக்க வாய்ப்பு உள்ளதால், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி, புதிய வடிகட்டி இரும்பு சட்டத்தை பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.