/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அன்பு, நல்லிணக்கம் தான் மக்களை நல்வழிப்படுத்தும் தாவூதி போரா முஸ்லிம் சமூக தலைவர் பேச்சு
/
அன்பு, நல்லிணக்கம் தான் மக்களை நல்வழிப்படுத்தும் தாவூதி போரா முஸ்லிம் சமூக தலைவர் பேச்சு
அன்பு, நல்லிணக்கம் தான் மக்களை நல்வழிப்படுத்தும் தாவூதி போரா முஸ்லிம் சமூக தலைவர் பேச்சு
அன்பு, நல்லிணக்கம் தான் மக்களை நல்வழிப்படுத்தும் தாவூதி போரா முஸ்லிம் சமூக தலைவர் பேச்சு
ADDED : ஜூன் 28, 2025 04:22 AM

சென்னை:''அன்பு, நல்லிணக்கம், மனிதநேயம் தான் மக்களை நல்வழிப்படுத்தும்,'' என, உலகளாவிய தாவூதி போரா முஸ்லிம் சமூக தலைவர் புனித சையத்னா முபாதல் சைபுதீன் தெரிவித்தார்.
தாவூதி போரா முஸ்லிம் சமூகத்தின், 'ஆஷாரா முபாரகா' எனப்படும், 'மொஹரம் சபை' நிகழ்ச்சி, சென்னை பாரிமுனை, மூர் தெருவில் உள்ள தாவூதி போரா முஸ்லிம் சமூக மசூதியில், நேற்று காலை துவங்கியது.
அதில், அச்சமூகத்தின் 53வது தலைவர் சையத்னா முபாதல் சைபுதீன் பேசியதாவது:
தாவூதி போரா முஸ்லிம் சமூகத்தின், 52வது தலைவராக இருந்த, என் தந்தை மறைந்த சையத்னா முகமது புர்ஹானுதீன், 50 ஆண்டுகளுக்கு முன் சென்னையில் நடந்த மொஹரம் சபை நிகழ்வில் பங்கேற்றதை நினைவுகூர விரும்புகிறேன்.
அவர் சென்னை மாநகரத்துடனும், இங்குள்ள போரா முஸ்லிம்களுடன் நல்ல தொடர்பில் இருந்தார்.
முகமது நபியின் பேரன் இமாம் ஹுசைன் மற்றும் அவரது குடும்பத்தினர் செய்த தியாகங்களை நினைவுகூர்வதே, 'ஆஷாரா முபாரகா' நிகழ்வு. அவர்களது தியாகங்களை நினைவுகூர்வது, ஆன்மிக சிந்தனைகளுக்கு வழிகாட்டும்; நம்மை பலப்படுத்தும். அன்பு, நல்லிணக்கம் மற்றும் மனிதநேயம் ஆகியவை, மக்களை நல்வழிப்படுத்துகிறது.
மதமும், அறிவியலும் மக்களை பண்படுத்தவும், பலப்படுத்தவும் உதவுகின்றன. வானத்தில் உள்ள நட்சத்திரங்களைப் போலவே, இஸ்லாமிய மத அறிஞர்கள் மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளனர்.
அன்பு என்பது நன்மைக்கான ஒரு சக்தி வாய்ந்த கருவி. மக்களை தொண்டு செய்ய அன்பு துாண்டுகிறது.
சென்னையில் வசிக்கும் போரா முஸ்லிம்கள் அர்ப்பணிப்பு, சேவை மனப்பான்மையுடன் வாழ்ந்து வருகின்றனர்.
அனைத்து சமூகங்களின் நம்பிக்கையை பெற்று உள்ளனர். இது பாராட்டுக்குரியது.
இவ்வாறு அவர் பேசினார்.
நேற்று துவங்கிய மொஹரம் சபை நிகழ்வு, வரும் ஜூலை 5ம் தேதி வரை நடக்கும். இந்நிகழ்வில் சென்னையில் வசிக்கும் 8,000 பேர், உலகெங்கும் இருந்து வந்துள்ள 35,000 பேர் என மொத்தம் 43,000 போரா முஸ்லிம்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிகழ்ச்சி, பாரிமுனை ஆர்மேனியன் தெருவில் உள்ள பின்னி திடல், ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., மைதானம், கீழ்ப்பாக்கம் விங்ஸ் கன்வென்ஷன் சென்டர், ராயபுரம் செட்டி தோட்டம், புர்ஹானி மசூதி உட்பட ஒன்பது இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.