/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோவில் குளத்தில் செத்து மிதந்த மீன்கள்
/
கோவில் குளத்தில் செத்து மிதந்த மீன்கள்
ADDED : செப் 25, 2024 12:32 AM

மணலி, சென்னை, மணலி காவலர் குடியிருப்பு எதிரே, ஜலகண்ட மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் அருகேயே குளம் உள்ளது.
குளத்திற்கு, சுற்றுவட்டாரத்தில் உள்ள மழைநீர் வடிகால் வழியாக, மழைநீர்வரத்து இருக்கும். கோவில் குளம் நிரம்புவதன் மூலம், அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வில் இருக்கும்.
இந்த நிலையில், மணலி முழுதும் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, பழைய மழைநீர் வடிகாலில் தேங்கியிருந்த கழிவுநீர், குழாய் வழியாக குளத்திற்குள் கலந்துள்ளது.
இந்நிலையில், குளத்தில் இருந்த 100க்கும் மேற்பட்ட மீன்கள், ஒரே நேரத்தில் செத்து மிதந்ததால், அப்பகுதி முழுதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது.
இதன் காரணமாக, கிருமி தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதால், மாநகராட்சி சுகாதாரத் துறை கவனித்து, மீன்களை அகற்ற வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.
இது குறித்து, சுகாதார துறை அதிகாரி கூறுகையில், ''குளத்தில் இறந்து மிதந்த மீன்களில், பாதி அகற்றப்பட்டு விட்டன. குளத்திற்கு இறங்க வழி ஏதும் இல்லாததால், அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும், சுகாதார நடவடிக்கையாக, பீளிச்சிங் பவுடர் போடப்பட்டுள்ளது. மீன்கள் இறந்த வாசனையால், பாதிப்பு ஏற்படாத வண்ணம் தெளிப்பான்கள் குளத்தை சுற்றி அடிக்கப்பட்டுள்ளது. இதனால், கிருமி தொற்று ஏதும் ஏற்படாது.
இவ்வாறு, அவர் கூறினார்.