/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தாம்பரம் பள்ளிகளில் 'ரோபோடிக் லேப்'; கல்வி தரத்தை மேம்படுத்த நடவடிக்கை
/
தாம்பரம் பள்ளிகளில் 'ரோபோடிக் லேப்'; கல்வி தரத்தை மேம்படுத்த நடவடிக்கை
தாம்பரம் பள்ளிகளில் 'ரோபோடிக் லேப்'; கல்வி தரத்தை மேம்படுத்த நடவடிக்கை
தாம்பரம் பள்ளிகளில் 'ரோபோடிக் லேப்'; கல்வி தரத்தை மேம்படுத்த நடவடிக்கை
UPDATED : செப் 02, 2025 11:41 AM
ADDED : செப் 02, 2025 02:05 AM
தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் கல்வி தரத்தை மேம்படுத்தும் விதமாக, முதல்கட்டமாக இரண்டு பள்ளிகளில், 30 லட்சம் ரூபாய் செலவில், 'ரோ போடிக் லேப்' அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், பம்மல், அனகாபுத்துார் ஆகிய ஐந்து நகராட்சிகள்; பெருங்களத்துார், பீர்க்கன்காரணை, மாடம்பாக்கம், சிட்லப்பாக்கம், திருநீர்மலை ஆகிய ஐந்து பேரூராட்சிகளை இணைத்து, கடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு முன், புதிதாக தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்பட்டது.
இங்கு, மாநகராட்சி மற்றும் ஆதிதிராவிடர் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்த, மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறது.
மாணவர்களின் வசதிக்காக கூடுதல் கட்டடங்கள், கழிப்பறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கணினி, லேப், பள்ளி சுவரில் அழகிய ஓவியங்கள் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், மாணவர்களின் அறிவியல், கணினி திறனை மேம்படுத்த, 'ரோபோடிக் லேப்' அமைக்க முடிவு செய்யப்பட்டு, முதல் கட்டமாக இரண்டு பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
திருநீர்மலை மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, சேலையூர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில், தலா 15 லட்சம் ரூபாய் செலவில், இந்த 'ரோபோடிக் லேப்'அமைக்கப்பட உள்ளது.
இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதால், விரைவில் இந்த லேப் பயன்பாட்டிற்கு வரும் என தெரிகிறது.
மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக, விரைவில் அறிவியல் கண்காட்சி நடத்த திட்டமிட்டுள்ளோம். அடுத்த கட்டமாக, அறிவியல் மற்றும் கணினி திறனை மேம்படுத்த, 'ரோபோடிக் லேப்' அமைக்க திட்டமிட்டு, முதல்கட்டமாக திருநீர்மலை, சேலையூர் பள்ளிகளை தேர்வு செய்துள்ளோம். இப்பள்ளிகளில் அமைக்கப்படும் இந்த லேப், மாணவர்களுக்கு எப்படி பயன்படுகிறது என்பதை பொறுத்து, படிப்படியாக மற்ற பள்ளிகளிலும் விரிவுபடுத்தப்படும். - வசந்தகுமாரி, மேயர், தாம்பரம் மாநகராட்சி.
ஆங்கில பேச்சு திறன் பயிற்சி
மாநகராட்சி பள்ளி மாணவர்களின் ஆங்கில பேச்சு திறனை மேம்படுத்தும் வகையில், ஆங்கில பேச்சு திறன் பயிற்சி, சில நாட்களுக்கு முன் துவங்கப்பட்டது. ஒவ்வொரு பள்ளியிலும், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு, இப்பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
மாநகராட்சி சார்பில் தனியாக ஆசிரியர் நியமிக்கப்பட்டு, வாரத்தில் இரண்டு நாட்களுக்கு, ஆங்கில பேச்சு திறன் பயிற்சி அளிக்கப்படும். இதன் மூலம், தனியார் பள்ளிகள் போல், மாநகராட்சி பள்ளி மாணவர்களும் ஆங்கில பேச்சு திறனில் சிறந்து விளங்குவர்.