/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரயில் பெட்டிகளை சுத்தம் செய்ய சுத்திகரிப்பு நீர் பயன்படுத்த முடிவு
/
ரயில் பெட்டிகளை சுத்தம் செய்ய சுத்திகரிப்பு நீர் பயன்படுத்த முடிவு
ரயில் பெட்டிகளை சுத்தம் செய்ய சுத்திகரிப்பு நீர் பயன்படுத்த முடிவு
ரயில் பெட்டிகளை சுத்தம் செய்ய சுத்திகரிப்பு நீர் பயன்படுத்த முடிவு
ADDED : டிச 30, 2025 04:45 AM
சென்னை: எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையங்களில், குடிநீரால் ரயில் பெட்டிகளை சுத்தம் செய்வதற்கு மாற்றாக, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து தண்ணீர் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலைய பணிமனைகளில் ரயில் பெட்டிகள், தண்டவாளங்களை சுத்தம் செய்வது மற்றும் ரயில் நிலைய இதர தேவைகளுக்கு, தினமும் 50 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.
தற்போது, குடிநீர் வாரியத்தில் இருந்து குடிநீர் வாங்கி பயன்படுத்தப்படுகிறது. குடிநீரை ரயில் பெட்டி சுத்தம் செய்ய பயன்படுத்துவதா என, பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு எழுந்தது. இதனால், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து தண்ணீர் வாங்கி, ரயில்வே நிர்வாகம் பயன்படுத்தலாம் என முடிவானது.
கோயம்பேடு, கொடுங்கையூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் வரும் கழிவுநீரை நன்னீராக மாற்றி, தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக, எழும்பூர், லேன்சன் கார்டனில், 37.77 கோடி ரூபாயில், 1 கோடி லிட்டர் கொள்ளளவு உடைய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், வாரியம் சார்பில் சமீபத்தில் திறக்கப்பட்டது.
இங்குள்ள தண்ணீரை வாங்கி, எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையங்களில் பயன்படுத்துவதற்காக, குடிநீர் வாரியம் மற்றும் ரயில்வே உயர் அதிகாரிகள் இடையே பேச்சு நடந்து வருகிறது.
இது குறித்து, குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
லேன்சன் கார்டனில் இருந்து, எழும்பூர் ரயில் நிலையம் வரை, 2.9 கி.மீ., துாரத்தில் குழாய் பதித்துள்ளோம். ரயில்வே முறையாக அனுமதி பெற்றால், சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து இந்த குழாய் வழியாக தண்ணீர் வழங்கப்படும். சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் வரை, குழாய் பதிக்க சாத்தியக்கூறு இல்லை. இதனால் லாரியில் தண்ணீர் பெற்று கொள்ளலாம். இறுதி முடிவு எடுக்க ஒரு சில மாதங்கள் ஆகும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

