/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எம்.ஜி.ஆர்., பல்கலையில் 4,000 பேருக்கு பட்டம்
/
எம்.ஜி.ஆர்., பல்கலையில் 4,000 பேருக்கு பட்டம்
ADDED : நவ 17, 2024 10:31 PM
சென்னை:''சர்வதேச அரங்கில் இந்தியா வீறுநடை போட, பிரதமர் மோடியின் புதிய தேசிய கல்வி கொள்கை வழிவகுக்கும்,'' என, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள, டாக்டர் எம்.ஜி.ஆர்., கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன நிகர்நிலை பல்கலையின், 33வது ஆண்டு பட்டமளிப்பு விழா, நேற்று நடந்தது. மத்திய இணை அமைச்சர் முருகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
விழாவில், நடிகர் அர்ஜுன், திரைப்பட இயக்குனர் பி.வாசு, விஞ்ஞானி ஜி.ஏ. ஸ்ரீனிவாசமூர்த்தி ஆகியோருக்கு, கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இளங்கலை, முதுகலை, முனைவர் உட்பட பல்வேறு பிரிவுகளில், 4,000 மாணவ, மாணவியர் பட்டங்கள் பெற்றனர்.
பட்டமளிப்பு விழாவில், மத்திய இணை அமைச்சர் முருகன் பேசியதாவது:
இந்தியா, 2047ல் வளர்ச்சி அடைந்த நாடாக வேண்டும் என்பதே டாக்டர் அப்துல் கலாமின் கனவு. அந்த இலக்கை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கின்றோம். கடந்த நிதியாண்டில், பொருளாதார வளர்ச்சியில், 11ம் இடத்தில் இருந்த நாம் தற்போது, இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி, உலகின் ஐந்தாவது பொருளாதார நாடாக முன்னேறி உள்ளோம்.
பிரதமர் மோடி, புதிய தேசிய கல்வி கொள்கையை கொண்டு வந்துள்ளார். சர்வதேச அரங்கில் போட்டி போட, நம்மை நாம் தயார்படுத்திக் கொள்வதற்காக, புதிய தேசிய கல்வி கொள்கை வழிவகுக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், ஏ.சி.எஸ். அருண் குமார், ஏ.சி.எஸ்.மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை செயலர் ரவிக்குமார், துணைவேந்தர் கீதாலட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்..
பாதுகாப்பில் கவனம்
பின் மத்திய இணை அமைச்சர் முருகன் அளித்த பேட்டியின்போது, ''கிண்டி அரசு மருத்துவமனையில், மருத்துவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. தமிழக அரசு மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு, வேலைக்கான உத்தரவாதம், பணி உயர்வை அளிக்க வேண்டும். பாதுகாப்பு விஷயத்தில், தமிழக அரசு இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்,'' என்றார்.