/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சீரமைக்கப்படாத பள்ளங்களில் விபத்து நடந்தால் நிறுவனங்கள் மீது நடவடிக்கை மண்டல குழு கூட்டத்தில் துணை கமிஷனர் எச்சரிக்கை
/
சீரமைக்கப்படாத பள்ளங்களில் விபத்து நடந்தால் நிறுவனங்கள் மீது நடவடிக்கை மண்டல குழு கூட்டத்தில் துணை கமிஷனர் எச்சரிக்கை
சீரமைக்கப்படாத பள்ளங்களில் விபத்து நடந்தால் நிறுவனங்கள் மீது நடவடிக்கை மண்டல குழு கூட்டத்தில் துணை கமிஷனர் எச்சரிக்கை
சீரமைக்கப்படாத பள்ளங்களில் விபத்து நடந்தால் நிறுவனங்கள் மீது நடவடிக்கை மண்டல குழு கூட்டத்தில் துணை கமிஷனர் எச்சரிக்கை
ADDED : செப் 22, 2025 10:30 PM
சோழிங்கநல்லுார்:சோழிங்கநல்லுார் மண்டல குழு கூட்டம், மண்டல அதிகாரி தணிகைவேலன் முன்னிலையில், மண்டல தலைவர் மதியழகன் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில், தெற்கு வட்டார துணை கமிஷனர் அதாப் ரசூல் பங்கேற்றார்.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:
கோவிந்தசாமி, அ.தி.மு.க., 193வது வார்டு: சாய் நகர், ஆனந்தம் நகர் ஆகியவை, வெள்ள பாதிப்பு அதிகமுள்ள பகுதியானதால், வடிகால்வாய் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.
விமலா, தி.மு.க., 194வது வார்டு: கவுன்சிலர்கள் பேசும் பிரச்னைக்கு, அதிகாரிகள், மண்டல குழு தலைவர் கூறும் பதிலை பதிவு செய்யும் அலுவலர்கள், அதை அறிக்கையாக தருவதில்லை.
ஏகாம்பரம், தி.மு.க., 195வது வார்டு: கழிவுநீர் திட்ட பணிகள் முடிந்து, பள்ளம் தோண்டிய தெருக்களை சீரமைக்க பல மாதங்களாக நடவடிக்கை எடுக்காததால், பருவ மழையின்போது மக்கள் மிகவும் பரிதவிப்பர். இதற்கு, குடிநீர் வாரியம், மாநகராட்சி அதிகாரிகள் இடையே ஒருங்கிணைப்பு இல்லாதது தான் காரணம்.
அஸ்வினி, அ.தி.மு.க., 196வது வார்டு: கண்ணகி நகர் மயானத்தில், இலவச வசதி இருந்தும், 3,000 ரூபாய் வாங்குவது எந்த விதத்தில் நியாயம்.
மேனகா, அ.தி.மு.க., 197வது வார்டு: முறையாக குடிநீர் வினியோகிப்பதில்லை. பேட்டரி வாகனங்கள் அடிக்கடி பழுதடைவதால், முறையாக குப்பை சேகரிப்பதில் சிக்கல் உள்ளது.
லியோ சுந்தரம், அ.தி.மு.க., 198வது வார்டு: காரப்பாக்கம் அணுகு சாலையில், குழாய் பதிக்கும் பணியை கிடப்பில் போட்டதால், தோண்டப்பட்ட பள்ளத்தால் மக்கள் சிரமப்படுகின்றனர். குடிநீர் வினியோகத்தை அதிகாரிகள் முறையாக கண்காணிப்பதில்லை. இணைப்பு இல்லாத வடிகால்வாய் பகுதிகளில், வெள்ள பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
சங்கர், தி.மு.க., 199வது வார்டு: இரண்டு மாதங்கள் ஆகியும், சமூக நலக்கூடம் கட்டும் பணி துவங்கவில்லை. வார்டு முழுதும் கழிவுநீர் பிரச்னை அதிகமாக உள்ளது.
முருகேசன், தி.மு.க., 200வது வார்டு: வடிகால்வாய்கள் துார் வாரப்படாததால், வெள்ள பாதிப்பு அதிகரிக்கும். குடிநீர் இணைப்பு வழங்குவதை முறைப்படுத்த வேண்டும்.
பல்வேறு பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களை, முறையாக சீரமைக்கவில்லை என, அனைத்து கவுன்சிலர்களும் புகார் கூறினர்.
இதற்கு பதில் அளித்த, துணை கமிஷனர் அதாப் ரசூல் பேசியதாவது:
தெற்கு வட்டாரத்தில் உள்ள ஐந்து மண்டலங்களில், சோழிங்கநல்லுாரில் பணிகள் மிக மோசமாக நடக்கின்றன. பள்ளம் தோண்டிய சாலைகளை, பருவ மழைக்கு முன் முறையாக சீரமைக்க வேண்டும்.
பள்ளத்தில் விபத்து நடந்தால், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், ஒப்பந்த நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பணி ஆணை பெற்று, மாதக்கணக்கில் பணி துவங்காத ஒப்பந்த நிறுவனங்கள் பட்டியலை தயாரித்து, கமிஷனருக்கு அனுப்புங்கள்.
புதிய சாலைகளை பள்ளம் தோண்டி நாசப்படுத்தினால், சம்பந்தப்பட்ட துறை, நபர்கள் மீது, போலீசில் வார்டு பொறியாளர் புகார் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து, சாலை, வடிகால்வாய் உள்ளிட்ட பணிகளுக்காக, 134 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.