/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
4 ஆண்டுகளில் ரூ.60 கோடி செலவு செய்தும்... ரிசல்ட் இல்லை!சி.எம்.டி.ஏ.,வின் 3வது முழுமை திட்டம் இழுபறி
/
4 ஆண்டுகளில் ரூ.60 கோடி செலவு செய்தும்... ரிசல்ட் இல்லை!சி.எம்.டி.ஏ.,வின் 3வது முழுமை திட்டம் இழுபறி
4 ஆண்டுகளில் ரூ.60 கோடி செலவு செய்தும்... ரிசல்ட் இல்லை!சி.எம்.டி.ஏ.,வின் 3வது முழுமை திட்டம் இழுபறி
4 ஆண்டுகளில் ரூ.60 கோடி செலவு செய்தும்... ரிசல்ட் இல்லை!சி.எம்.டி.ஏ.,வின் 3வது முழுமை திட்டம் இழுபறி
ADDED : ஜன 20, 2026 05:38 AM

சென்னை: நான்கு ஆண்டுகளில், 60 கோடி ரூபாய் செலவிட்டும், சென்னை பெருநகர் பகுதிக்கான மூன்றாவது முழுமை திட்ட வரைவு திட்ட அறிக்கை, இன்னும் இறுதி செய்யப்படவில்லை என, நகரமைப்பு வல்லுநர்கள் புகார் தெரிவித்துள்ளனர். சட்டசபை தேர்தல் நெருங்குவதால், மக்கள் கருத்து கேட்பு எல்லாம் நடத்த முடியாத நிலை ஏற்படும் என்பதால், இந்த ஆட்சிக்காலத்திற்குள் மூன்றாவது முழுமை திட்ட வரைவு வெளியாக வாய்ப்பில்லை என்றும், அவர்கள் கூறுகின்றனர். சென்னை பெருநகர் பகுதிக்கான இரண்டாவது முழுமை திட்டம், 2008ல் அறிவிக்கப்பட்டது. இத்திட்டம், உரிய கால இடைவெளியில் மறு ஆய்வு செய்யாமல், புதுப்பிக்கப் படாமல் காலாவதியானது.
இதையடுத்து, உலக வங்கி வழிகாட்டுதல்கள் அடிப்படையில், மூன்றாவது முழுமை திட்டம் தயாரிக்கும் பணிகளை, சி.எம்.டி.ஏ., 2022ல் துவங்கியது. கலந்தாலோசகர்கள் வாயிலாக இதற்கான கருத்து கேட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
சென்னை பெருநகரில், 2027 - 2046 வரையிலான, 20 ஆண்டுகளில் ஏற்படும் நகர்ப்புற வளர்ச்சியை முறைப்படுத்தும் வகையிலான திட்டங்கள் அடங்கியதாக, இந்த அறிக்கை இருக்கும் என, அறிவிக்கப்பட்டது.
இதன்படி, சென்னை பெருநகருக்கான தொலைநோக்கு ஆவண தயாரிப்பு பணிகள், 2023ல் நடந்தன. அதில், துறை வாரியாகவும், பகுதி வாரியாகவும் கருத்துகள் கேட்கப் பட்டன.
ஒவ்வொரு பகுதிக்கும் அடுத்த, 20 ஆண்டுகளில் என்னென்ன திட்டங்கள் தேவை என்ற அடிப்படையில், இந்த கருத்து கேட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் அடிப்படையில், 27 தலைப்புகளில் கலந்தாலோசனை நிறுவனங்கள் அறிக்கைகளை அளித்துள்ளன.
இந்த அறிக்கைகள் அடிப்படையில், மூன்றாவது முழுமை திட்ட வரைவு ஆவணத்துக்கான அத்தியாயங்களை, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் இறுதி செய்ய வேண்டும். ஆனால், இதற்கான பணிகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து, நகரமைப்பு வல்லுநர்கள் கூறியதாவது:
சென்னை பெருநகருக்கான மூன்றாவது முழுமை திட்ட வரைவு அறிக்கை, 2026 ஜனவரியில் வெளியிடப்படும் என, இத்துறைக்கான அமைச்சர் சேகர்பாபு, கடந்த ஆண்டில் அறிவித்தார். ஆனால், ஜனவரி துவங்கி 20 நாட்கள் ஆன நிலையில், இதற்கான எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.
மூன்றாவது முழுமை திட்ட வரைவு அறிக்கை தயாரிக்க இதுவரை, 60 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக மாதம், 3 லட்சம் ரூபாய் ஊதியத்தில் ஒப்பந்த அடிப்படையில், ஒரு ஆலோசகர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
இது மட்டுமின்றி, சி.எம்.டி.ஏ.,வில் பணி புரிந்து ஓய்வுபெற்ற சீப் பிளானர், ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் நியமிக்கப்பட்டார். இதுதவிர, 30க்கும் மேற்பட்ட நபர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர்.
இருப்பினும், முழுமை திட்ட வரைவு ஆவணம் தயாரிப்பு பணிகள் இழுபறியாக உள்ளன.
அமைச்சர் அறிவித்தபடி, ஜனவரி இறுதிக்குள் வரைவு ஆவணத்தை வெளியிட்டாலும், அதன்மீது அமைப்புகள், துறைகள், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் ஆகியோரிடம் கருத்து கேட்க வேண்டும். இதற்கு மூன்று மாத அவகாசம் வேண்டும்.
சட்டசபை தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், கருத்து கேட்பு பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படும். எனவே, தற்போதைய ஆட்சிக்காலம் முடிவதற்குள் மூன்றாவது முழுமை திட்ட வரைவு வெளியாக வாய்ப்பு இல்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

