/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சோழிங்கநல்லுார் தாங்கல் ஏரி பறவைகள் தீவுடன் மேம்பாடு
/
சோழிங்கநல்லுார் தாங்கல் ஏரி பறவைகள் தீவுடன் மேம்பாடு
சோழிங்கநல்லுார் தாங்கல் ஏரி பறவைகள் தீவுடன் மேம்பாடு
சோழிங்கநல்லுார் தாங்கல் ஏரி பறவைகள் தீவுடன் மேம்பாடு
ADDED : ஜன 27, 2025 03:54 AM

சோழிங்கநல்லுார்:சோழிங்கநல்லுார் மண்டலம், 199வது வார்டில் நீர்வளத் துறைக்கு சொந்தமான தாங்கல் ஏரி உள்ளது. இரு மாதங்களுக்கு முன், மாநகராட்சி சார்பில், 50 லட்சம் ரூபாய் செலவில் ஏரிக்கரை பலப்படுத்தப்பட்டது.
இந்த ஏரியில், 24 ஏக்கர் பரப்பை மேம்படுத்த, கோவையைச் சேர்ந்த 'சிறுதுளி' என்ற தன்னார்வ அமைப்பு முன் வந்தது. இதற்காக, 2.50 கோடி ரூபாயை அந்நிறுவனம் சி.எஸ்.ஆர்., நிதியில் இருந்து ஒதுக்கியது.
இதற்கான பணியை, சோழிங்கநல்லுார் தொகுதி எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ், நேற்று துவக்கி வைத்தார். இதில் வார்டு கவுன்சிலர் சங்கர், மண்டல அதிகாரி ராஜசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
'சிறுதுளி' அமைப்பின் நிர்வாகத்தினர் கூறியதாவது:
இந்த ஏரி, சாலை மட்டத்திலிருந்து 5 அடி ஆழத்தில் 10 கோடி லிட்டர் தண்ணீர் சேமிக்கும் கொள்ளளவில் உள்ளது.
தற்போது மேற்கொள்ளப்படும் பணியால், கூடுதலாக 10 அடி ஆழத்தில் துார்வாரி 2 லட்சம் கன அடி மண் அகற்றப்படும். மேல் பரப்பில் களிமண், 5 அடி ஆழத்துக்கு கீழ் ஓடைமண் உள்ளது.
மொத்தம் 30 கோடி லிட்டர் தண்ணீர் சேமிக்கும் அளவுக்கு ஏரி ஆழப்படுத்தப்படும். சுற்றி 1.5 கி.மீ., நீளம், 10 அடி அகலத்தில் நடைபாதை, சிமென்ட் இருக்கைகள், மின்விளக்குகள் மற்றும் நிழல்தரும், 2,000 மரக்கன்றுகள் நடப்பட உள்ளன.
ஏரிக்குள் இரண்டு இடத்தில், அடர்வனம் அமைத்து பறவைகள் தீவு அமைக்கப்படும். ஏரியில், நீர்வரத்து மற்றும் உபரிநீர் வெளியேறும் கட்டமைப்பு அமைக்கப்பட உள்ளது.
உபரிநீர், ராமன்தாங்கல் ஏரியில் சேர்ந்து அங்கிருந்து ஒக்கியம்மடு செல்லும். இந்த ஏரியை மேம்படுத்துவதால், 2 கி.மீ., சுற்றளவில் நிலத்தடி நீர் அதிகரிக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

