/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வடபழனி முருகன் கோவில் சாலையோர ஆக்கிரமிப்பால் திணறும் பக்தர்கள்
/
வடபழனி முருகன் கோவில் சாலையோர ஆக்கிரமிப்பால் திணறும் பக்தர்கள்
வடபழனி முருகன் கோவில் சாலையோர ஆக்கிரமிப்பால் திணறும் பக்தர்கள்
வடபழனி முருகன் கோவில் சாலையோர ஆக்கிரமிப்பால் திணறும் பக்தர்கள்
ADDED : பிப் 26, 2026 05:35 AM

சென்னை: வடபழனி முருகன் கோவிலில், முகப்பு சாலையின் இருபுறமும் நடைபாதை ஆக்கிரமிப்பால், நடந்து செல்ல வழியின்றி பக்தர்கள் அவதியடைந்து வருகின்றனர்.
சென்னையில் மிகவும் பிரசித்தி பெற்ற வடபழனி முருகன் கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, சுவாமியை தரிசனம் செய்கின்றனர். திருமண நாட்கள், செவ்வாய் உள்ளிட்ட முக்கிய நாட்களில், பக்தர்களின் கூட்டம் அலைமோதும்.
ஆற்காடு சாலையில் இருந்து வடபழனி கோவில் முகப்பிற்கு செல்லும் பிரதான சாலையாக, ஆண்டவர் தெரு உள்ளது. இந்த தெருவின் இருபுறமுள்ள நடைபாதை மற்றும் சாலையில் பூ, மாலை, தேங்காய் விற்பனை கடைகள் ஆங்காங்கே முளைத்துள்ளன.
தவிர, சில உணவு விடுதிகள், காஸ் சிலிண்டர்களை ஆபத்தான முறையில் நடைபாதையில் வைத்து, அங்கேயே சமைக்கின்றன.
பகல் நேரத்திலும் சரக்கு இறக்கும் வாகனங்கள், சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன. வாகனங்கள் சாலையிலே யேநிற்பதால், பக்தர்கள் கோவில் நுழைவாயிலை அடைய முடியாத நிலை ஏற்படுகிறது. எதிர்பாராதவிதமாக தீ விபத்தோ அல்லது ஏதேனும் விபத்து ஏற்பட்டாலோ தீயணைப்பு, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள், கோவில் முகப்பு சாலை உள்ளே நுழைய முடியாத அளவுக்கு ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது. இதனால், உயிரிழப்பு பெருமளவில் ஏற்படும் அபாயம் உள்ளது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாநகராட்சி, காவல் துறை, போக்குவரத்து போலீசாருக்கு பலமுறை புகார் அளித்தும், சம்பந்தப்பட்ட துறையினர் கண்டுகொள்ளாமல் இருப்பதால், பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பக்தர்கள் மற்றும் பகுதிமக்கள் கூறியதாவது:
ஆளுங்கட்சியினர் தலையீடே, ஆண்டவர் தெருவில் ஆக்கிரமிப்பாளர்களின் அத்துமீறல்கள் அதிகரிக்க காரணம். நடைபாதை மற்றும் சாலையை ஆக்கிரமித்து கடை நடத்த, ஆளுங்கட்சியினர் ஒரு தொகையை வாங்கி கொண்டு அவர்களுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர்.
இதற்கு, மாநகராட்சி ஊழியர்களும் உடந்தையாக இருப்பதால், ஆக்கிரமிப்பாளர்களின் கை ஓங்கி வருகிறது. பக்தர்கள் நிம்மதியாக வந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு செல்லும் வகையில், ஆக்கிரமிப்புகளை அகற்ற, மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'வடபழனி கோவிலைச் சுற்றி உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை தொடர்ந்து அகற்றி வருகிறோம். மீண்டும் ஆக்கிரமிப்பு கடைகள் முளைத்திருந்தால், உடனடியாக அகற்றப்படும்' என்றனர்.

