/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'கிருஷ்ணசாமி அசோசியேட்ஸ்' வைர விழா
/
'கிருஷ்ணசாமி அசோசியேட்ஸ்' வைர விழா
ADDED : பிப் 13, 2024 12:41 AM

தி.நகர், 'கிருஷ்ணசாமி அசோசியேட்ஸ்' நிறுவனத்தின் 60ம் ஆண்டு விழா, வைர விழாவாக நேற்று தி.நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கொண்டாடப்பட்டது.
இதில், நாகாலந்து கவர்னர் இல.கணேசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். கிருஷ்ணசாமி அசோசியேட்ஸ் இதுவரை தயாரித்த ஆவண படங்கள், நாடகம் உள்ளிட்டவற்றின் சிறிய பாகங்கள் அடங்கிய தொகுப்பு திரையிடப்பட்டது.
இவ்விழாவில், ஆற்காடு இளவரசர் திவான் நவாப்சாதா முகமது ஆசிப் அலி, பகவான் மகாவீர் அறக்கட்டளை நிறுவனர் சுகல்சந்த் ஜெயின், அமெரிக்காவிற்கான முன்னாள் இந்திய துாதர் திருமூர்த்தி, எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை முன்னாள் துணை வேந்தர் சுதா சேஷையன், கிருஷ்ணசாமி அசோசியேட்ஸ் நிறுவனர் கிருஷ்ணசாமி, அவரது மனைவி மோகனா உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்வில், நாகாலந்து கவர்னர் இல.கணேசன் பேசியதாவது:
நான், 'கிருஷ்ணசாமி அசோசியேட்ஸ்' நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட, 'இண்டஸ் வேலி முதல் இந்திரா காந்தி வரை' என்கிற ஆவண பட காலக்கட்டத்தை சேர்ந்தவன்.
நாற்பது ஆண்டுகளுக்கு முன், ராமநாதபுரம் கமுதி என்ற ஊருக்கு சென்றிருந்தபோது, அமெரிக்கா சென்று திரும்பிய ஒரு குடும்பம், இந்தியாவில் பசி, பட்டினி, வறுமை குறித்து மட்டுமே காட்சிப்படுத்தி, மோசமாக சித்தரிக்கும் ஆவணப்படும் அமெரிக்காவில் வெளியிடப்பட்டிருந்ததாக தெரிவித்தனர்.
அந்த அமெரிக்க ஆவணப்படத்திற்கு பதில் சொல்லும் வகையில், இண்டஸ் வேலி முதல் இந்திரா காந்தி வரை' அமைந்திருந்தது.
முன்னொரு காலத்தில், இந்தியா -- பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளின் போது மட்டுமே தேசப்பற்று தெரியும். ஆனால் இன்றைய இளைஞர்களுக்குள்ளேயே தேசப்பற்று உள்ளது. அதை தட்டி எழுப்ப வேண்டும் என்றால், கிருஷ்ணசாமி தயாரித்த படங்களை இளைஞர்களுக்கு மீண்டும் மீண்டும் போட்டு காட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.