/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'மொழியைக் காக்க அகராதிகள் அவசியம்'
/
'மொழியைக் காக்க அகராதிகள் அவசியம்'
ADDED : ஜன 20, 2024 12:40 AM

கலைச்சொல்லாக்கத்திலும், அகராதிகள் உருவாக்கத்தி லும் மும்முரமாக இயங்குகிறது தமிழக அரசின் செந்தமிழ் சொற்பிறப் பி யல் அகரமுதலி திட்ட இயக்ககம். அதன் இயக்குனர் விசயராகவனிடம் பேசியதில் இருந்து...
செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்ககம் பற்றி?
தேவநேயப்பாவாணரின் வேர்ச்சொல் ஆய்வுகளைத் தொடர்ந்து செய்யவும், அகராதிகளை உருவாக்கவும், 1974ல் துவக்கப்பட்டது இந்த இயக்ககம். தமிழின் சொல் வளங்களை சேகரித்தல், பிறமொழி சொற்களுக்கு ஏற்ப கலைச்சொற்களை உருவாக்குதல் உள்ளிட்டவையும் இதன் பணிகள். தமிழ் வழிக்கல்விக்கும் மொழிபெயர்ப்புக்கும் இந்த கலைச்சொல்லாக்கம் பயன்படுகிறது. கடந்த கால தமிழை அறியவும், தற்கால தமிழை எதிர்கால தமிழர்களுக்கு அறிவிக்கவும், இந்த அகராதிகள் மிக அவசியம்.
இதுவரை வந்துள்ள வெளியீடுகள்?
அரசு பணியாளர்கள் தமிழில் பேசவும், எழுதவும் பயன்படும் வகையில், திருந்திய ஆட்சி சொல்லகராதியை ஒரு லட்சம் பிரதிகளும், தனித்தனியாக துறை சார்ந்த சொற்களை தொகுத்து, 48 துறைகளுக்கான கலைச்சொல் குறுநுால்கள் உருவாக்கப்பட்டு, 25 பிரதிகள் அச்சிட்டு வழங்கி உள்ளோம்.
அவற்றுடன், ஏழு தொகுதிகளை உடைய சொற்பிறப்பியல் பேரகரமுதலியின் திருந்திய பதிப்பு, மருத்துவ கலைச்சொல் அகராதி, வட்டார வழக்கு சொற்பொருள் அகராதி, பிறமொழியினருக்கான 'தமிழ்ப்பேசி' குறுஞ்செயலி ஆகியவற்றை வெளியிட்டுள்ளோம்.
அத்துடன், ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் தமிழை அறியும் வகையில், 'நற்றமிழ் அறிவோம்' என்ற நுாலை வண்ணப்படங்களுடன் அச்சிட்டுள்ளோம். மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, 'வேர்ச்சொல் சுவடி'யை பதிப்பித்துள்ளோம்.
தமிழில் ஏற்படும் எழுத்துப்பிழையை திருத்த ஏதும் பதிப்பிக்கப்பட்டுள்ளதா?
மயங்கொலி சொல்லகராதி, ஒருபொருட் பன்மொழி அகராதி, தமிழ் மரபுத்தொடர் அகராதி ஆகியவற்றை வெளியிட்டுள்ளோம். மேலும், நடைமுறை தமிழில் ஏற்படும் எழுத்து, சொற்பிழைகளை தவிர்க்கும் வகையில், நடைமுறைத் தமிழ் அகரமுதலியை உருவாக்கி உள்ளோம். தமிழில் ஏற்படும் எழுத்துப்பிழை சார்ந்த சந்தேகங்களுக்கு விடையளிக்கும் வகையில், 'தமிழ் பையடக்க அகராதி'யை வெளியிட்டுள்ளோம். இதை, எப்போதும் பையில் வைத்துக்கொள்ளலாம்.
இவை இணையதளத்தில் கிடைக்குமா?
இவை, 'சொற்குவை டாட் காம் -- sorkuvai.com' என்ற வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
கலைச்சொல் உருவாக்கம் பற்றி சொல்லுங்களேன்?
தமிழாசிரியர்கள், மாணவர்கள் இணைந்து, புதிய துறைகளில் புழங்கும் புதிய சொற்களுக்கான தமிழ் கலைச்சொற்களை உருவாக்குகின்றனர். அவற்றை, மொழி வல்லுனர்கள் ஆய்வு செய்து ஒப்புதல் அளிக்கின்றனர். அவற்றுக்கு அரசாணை பெறப்பட்டு, சொற்குவை டாட் காம் மற்றும் சமூக ஊடகங்களில் பதிவேற்றுகிறோம்.
இதுவரை, தமிழில் எத்தனை கலைச்சொற்கள் கண்டறியப்பட்டுள்ளன?
இதுவரை 14.65 லட்சம் கலைச்சொற்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த கலைச் சொல்லாக்கத்தை ஊக்கப்படுத்த விருதுகள் வழங்கப்படுகின்றன. தமிழ் அகராதி உருவாக்கத்தில் சிறந்து விளங்குவோருக்கு, அரசின் சார்பில் 'தேவநேயப்பாவாணர் விருது' மற்றும் 2 லட்சம் ரூபாய், ஒரு சவரன் தங்கம் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
வெளிநாட்டைச் சேர்ந்தோர் தமிழ் அகராதியை வெளியிட்டால் 'வீரமாமுனிவர் விருது' மற்றும் 2 லட்சம் ரொக்கம், ஒரு சவரன் தங்கம் வழங்கப்படுகிறது. அதேபோல் 'துாயதமிழ்ப் பற்றாளர் விருது, துாய தமிழ் ஊடக விருது' உள்ளிட்டவற்றையும் வழங்குகிறோம்.
சொற்குவை இணைய பக்கத்தின் இணைப்பை அரசுத்துறை இணையதளங்கள், மத்திய அரசின் விகாஸ்பீடியா பக்கம் உள்ளிட்டற்றில் இணைத்துள்ளோம்.
ஆங்கிலத்தில் அகராதிகள், ஆடியோ, வீடியோ, அனிமேஷன் உள்ளிட்ட வடிவங்களிலும் கிடைக்கின்றன. தமிழில்?
தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, தமிழ் தன்னை தகவமைத்துக்கொள்ளும். அரசு அனுமதி கிடைத்தால் அனைத்தும் சாத்தியம் தான். ஒரு மொழி வளர்வதை, அந்த மொழியில் உள்ள கலைச்சொற்களின் எண்ணிக்கையை வைத்துதான் கணக்கிடுகின்றனர். அந்த வகையில், தொழில்நுட்ப யுகத்திலும் தமிழ், அதன் சொற்களுக்கு இணையான சொற்களை உருவாக்கிக்கொண்டு வளரும்.
-- நமது நிருபர் --