/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காஞ்சிபுரத்தில் தெரு நாய்களுக்கு கருத்தடை மருத்துவர்கள் அலட்சியம் செய்வதாக அதிருப்தி
/
காஞ்சிபுரத்தில் தெரு நாய்களுக்கு கருத்தடை மருத்துவர்கள் அலட்சியம் செய்வதாக அதிருப்தி
காஞ்சிபுரத்தில் தெரு நாய்களுக்கு கருத்தடை மருத்துவர்கள் அலட்சியம் செய்வதாக அதிருப்தி
காஞ்சிபுரத்தில் தெரு நாய்களுக்கு கருத்தடை மருத்துவர்கள் அலட்சியம் செய்வதாக அதிருப்தி
ADDED : அக் 24, 2025 01:51 AM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் தெரு நாய்களுக்கு கால்நடை மருத்துவர்கள் கருத்தடை செய்வதில்லை என, ஊராட்சி தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து கேள்வி எழுப்பினால், போதிய கட்டமைப்பு வசதி இல்லாதது, மற்ற பணிகளால் நாய்களுக்கு கருத்தடை செய்ய மறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறுவதாகவும், அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 19,652 எருமை மாடுகள், 1.68 லட்சம் கறவை மாடுகள், பன்றிகள், செம்மறியாடுகள், வெள்ளாடுகள், நாய்கள், கோழிகள் என, மொத்தம், 4.10 லட்சம் கால்நடைகள் உள்ளன.
இவற்றுக்கு குடற்புழு நீக்கம், வெறிநாய் கடி, இனப்பெருக்கம், காய்ச்சல் ஆகிய பல்வேறு விதமான நோய்களில் பாதிக்கப்படும் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க 148 கால்நடை மருத்துவமனைகள் மற்றும் மையங்கள் உள்ளன.
தட்டிக்கழிப்பு இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், மக்களுக்கு பீதியூட்டும் வகையில் சுற்றித்திரியும் 28,344 தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யவில்லை என, ஊராட்சி தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கால்நடை துறையினர் ஒத்துழைப்பு அளிக்காததால், நாய்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருவதாகவும், அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, பெயர் குறிப்பிடாத ஊராட்சி தலைவர் கூறியதாவது:
நாய்களுக்கு கருத்தடை செய்யும்படி, கால்நடை துறைக்கு கோரிக்கை வைத்தாலும், இங்குள்ள மையங்களில் போதிய வசதியில்லாததால் அதை செய்ய முடியாது என, மருத்துவர்கள் பொறுப்பை தட்டிக்கழிக்கின்றனர். தவிர, மற்ற பணிகளால் தெருநாய்களுக்கு கருத்தடை செய்வதை மறந்துவிட்டோம் எனவும் தெரிவிக்கின்றனர்.
மேலும், தெரு நாய்களுக்கு சிகிச்சை அளிப்பது குறித்து கால்நடை மருத்துவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதில்லை.
கட்டட வசதி இல்லை இவர்களின் அலட்சியத்தால், தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து, தெருக்களில் விளையாடும் குழந்தைகள், பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள், நாய்க்கடிக்கு உள்ளாகும் நிலை உள்ளது. நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த, அவற்றுக்கு உடனே கருத்தடை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட கால்நடை மருத்துவர் ஒருவர் கூறியதாவது:
நாய்களுக்கு கருத்தடை செய்வதற்கு ஏற்ப, கிராமப்புற கால்நடை மருத்துவமனைகளில் உபகரணங்களுடன்கூடிய கட்டட வசதி இல்லை. இருப்பினும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பெரு நகர மருத்துவமனைகளில் செய்கின்றனர்.
மேலும், கிராமப்புற கால்நடை மருத்துவர்களுக்கு ஆண்டுதோறும் புத்தாக்க பயிற்சி அளிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

