ADDED : ஜன 21, 2013 05:41 AM
சென்னை:சென்னையிலிருந்து தப்பி ஓடிய கள்ள நோட்டு கும்பலின் தலைவன், முகமது ரபீக், கோல்கட்டாவில் பதுங்கியிருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து, தனிப்படை போலீசார், கோல்கட்டா செல்ல திட்டமிட்டுள்ளனர்.
நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் வகையில், சென்னையில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற, அப்துல் இஸ்மாயில், வசீம் ராஜா, அப்துல் முனாப் ஆகியோரை இரு நாட்களுக்கு முன், போலீசார் கைது செய்தனர்.
இவர்களிடமிருந்து, 5.03 லட்சம் கள்ள நோட்டுகளையும், 4,800 ரூபாய் அசல் கரன்சியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், வியாசர்பாடியை சேர்ந்த முகமது ரபீக் என்பவர், கள்ள நோட்டு கும்பலின் தலைவனாக செயல்பட்டு வருவதும், கொடுங்கையூர்
சிவசங்கரன் தெருவில் உள்ள வீடு ஒன்றில் தங்கியிருப்
பதும் தெரிந்தது. போலீசார் அங்கு விரைந்தனர்.
போலீசார் வருவதை அறிந்த முகமது ரபீக், ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு, சூட்கேஸ் ஒன்றுடன் தப்பியோடினார். அவர் தங்கியிருந்த வீட்டில், போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, முகமது ரபீக், கோல்கட்டாவில் உள்ள லாட்ஜ்களில் அடிக்கடி தங்கியதற்கான, ரசீதுகள் சிக்கின.
மேற்கு வங்கத்தில் இது போன்று, 'நெட்வொர்க்' ஒன்றை அமைத்து, முகமது ரபீக் செயல்பட்டு வந்திருக்கலாம் எனவும், கோல்கட்டாவிற்கே தப்பி சென்றிருக்கலாம் எனவும், போலீசார் சந்தேகம் அடைந்து
உள்ளனர்.
இதையடுத்து, தனிப்படை போலீசார், கோல்கட்டா செல்ல திட்டமிட்டுள்ளனர். முகமது ரபீக் தங்கியிருந்த லாட்ஜ்களிலும் விசாரணை நடத்தவும், அங்குள்ள போலீஸ் அதிகாரிகள் ஒத்துழைப்போடு, முகமது ரபீக்கை மடக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
கள்ள நோட்டுக் கும்பலுக்கு, பயங்கரவாத கும்பலுடன் தொடர்பு இருக்கலாம் எனவும், சந்தேகிக்கப்படுகிறது.
சென்னை மட்டுமின்றி, தமிழகத்தின் பிற முக்கிய நகர்ப் பகுதிகளிலும், கள்ள நோட்டு புழக்கம் இருக்கலாம் என்பதால், போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
