/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நோய் தொற்று மையமான கழிப்பறை செங்குன்றம் பஸ் நிலையத்தில் சீர்கேடு
/
நோய் தொற்று மையமான கழிப்பறை செங்குன்றம் பஸ் நிலையத்தில் சீர்கேடு
நோய் தொற்று மையமான கழிப்பறை செங்குன்றம் பஸ் நிலையத்தில் சீர்கேடு
நோய் தொற்று மையமான கழிப்பறை செங்குன்றம் பஸ் நிலையத்தில் சீர்கேடு
ADDED : பிப் 16, 2024 12:23 AM
செங்குன்றம்,செங்குன்றம் பேருந்து நிலைய கட்டண கழிப்பறை நோய்த்தொற்று மையமாகவும் 'போதை' நபர்களின் புகலிடமாகவும் மாறியுள்ளதால், பயணியர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
சென்னை, செங்குன்றம் பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் ஆந்திர மாநிலம் ஆகியவற்றுக்கு, 200க்கும் மேற்பட்ட, அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
செங்குன்றம் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பயணியர் அதிகமானோர், இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்துகின்றனர்.
இவர்களில் பெரும்பாலானோர் இயற்கை உபாதையைக் கழிக்க, இந்த பேருந்து நிலையத்தில் உள்ள, நாரவாரிக்குப்பம் பேரூராட்சி வாயிலாக ஏலம் விடப்பட்ட கட்டணக் கழிப்பறையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த கட்டணக் கழிப்பிடத்தில் இயற்கை உபாதையைக் கழிக்க, 7 ரூபாயும், சிறுநீர் கழிக்க 5 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. ஆனால் அந்த கழிப்பறைகள் பெயரளவில் கூட பராமரிப்பு இல்லாமல், மிக மோசமான நிலையில் உள்ளன. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அந்த கழிப்பறை கட்டடமும், போதிய பராமரிப்பின்றி சிதிலமடைந்து உள்ளது.
அவற்றில் இருந்து கழிவுநீர் உள்ளிட்ட கழிவுகள் முறையாக வெளியேற வழியின்றி, கழிப்பறை கட்டடத்தை சுற்றி தேங்குகின்றன.
இதனால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு அதிகரித்துள்ளது. மேலும் அந்த கட்டடத்தையொட்டி, பேரூராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வினியோகிக்கும் குழாய் இணைப்பு மற்றும் சமுதாயக்கூடம் ஆகியவை அமைந்துள்ளன.
அங்கு நடக்கும் நிகழ்ச்சி மற்றும் விழாக்களில் பங்கேற்போர், கழிப்பறையின் துர்நாற்றம் தாங்க முடியாமல் வாந்தி எடுத்து, உடல்நல பாதிப்பிற்கு ஆளாகின்றனர்.
அந்த பழைய கழிப்பறையை இடித்துவிட்டு, நவீன கழிப்பறை கட்ட வேண்டும் என்ற கோரிக்கையும், பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது.
மேலும் இந்த மோசமான கழிப்பறை நோய்த்தொற்று பரப்பு மையமாகவும், போதை நபர்களின் புகலிடமாகவும் மாறியுள்ளது. இதனால், பேருந்து பயணியர் மற்றும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.
கஞ்சா விற்பனை
மேலும் இந்த கழிப்பறை, போதை நபர்களின் கூடாரமாகி விட்டது. கஞ்சா, மதுப்பிரியர்கள், கழிப்பறையை ஆக்கிரமித்து ஆட்டம் போடுகின்றனர்.
அதனால், அங்கு கஞ்சா விற்பனையும், 'களை' கட்டுகிறது. அதனால், பெண்கள் கழிப்பறைக்கு சென்றுவர அஞ்சுகின்றனர். கழிப்பறைக்கு வரும் வழியில் நடைபாதை காய்கறிக் கடைகளும் முளைத்து விடுகின்றன. அவற்றாலும், பயணியர் உள்ளே செல்ல முடியாத நிலை உள்ளது.
மேற்கண்ட கழிப்பறை உள்ள இடத்தில் இருந்து, 50 அடி துாரத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறை, 15 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. ஆனால், இன்றுவரை அவர்கள் பயன்படுத்த முடியாமல், மூடியே கிடக்கின்றது. அதனால், மாற்றுத்திறனாளிகளும் கழிப்பறையை பயன்படுத்த முடியாமல் தவிக்கின்றனர்.
இந்த பிரச்னைகளுக்குத் தீர்வுகாண, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.