ADDED : ஜன 05, 2024 12:57 AM

அம்பத்துார், அம்பத்துார் மண்டலம், 81, 82வது வார்டு, மேனாம்பேடு- - கருக்கு பிரதான சாலை சந்திப்பில், நேற்று அதிகாலை 2:30 மணியளவில், 2 அடி அகலம், 10 அடி ஆழத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டது.
இது குறித்து காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இரவு ரோந்து பணியில் இருந்த அம்பத்துார் போலீசார், விபத்து அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க, தடுப்பு அமைத்தனர். காலையில், அங்கு சென்ற மாநகராட்சியினர், பள்ளம் ஏற்பட்ட இடத்தில் மண் கொட்டி தற்காலிகமாக சீரமைத்தனர்.
கடந்த 30ம் தேதி முற்பகல் 11:35 மணி அளவில், கொரட்டூர் கிழக்கு நிழற்சாலையில், 7 அடி அகலம், 10 அடி ஆழத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இதில் பாஸ்கர் என்பவர் ஓட்டி சென்ற, 'மாருதி ஸ்விப்ட்' ரக கார் சிக்கியது.
போக்குவரத்து போலீசார், டிரைவரையும் காரையும் மீட்டது குறிப்பிடத்தக்கது.
கொரட்டூர், பாடி, அம்பத்துார் சுற்றுவட்டாரங்களில், ஆங்காங்கே ஏற்படும் திடீர் பள்ளங்களால், வாகன ஓட்டிகள் அச்சத்திற்கு ஆளாகி உள்ளனர்.