/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வீடு கட்ட, கட்டட அனுமதி, சாலை வெட்டுக்கு பணம் வசூலிப்பதாக தி.மு.க., கவுன்சிலர் புகார் சரியாக உழைத்தால் தான் ஆட்சி கிடைக்கும் எனவும் சூசகம்
/
வீடு கட்ட, கட்டட அனுமதி, சாலை வெட்டுக்கு பணம் வசூலிப்பதாக தி.மு.க., கவுன்சிலர் புகார் சரியாக உழைத்தால் தான் ஆட்சி கிடைக்கும் எனவும் சூசகம்
வீடு கட்ட, கட்டட அனுமதி, சாலை வெட்டுக்கு பணம் வசூலிப்பதாக தி.மு.க., கவுன்சிலர் புகார் சரியாக உழைத்தால் தான் ஆட்சி கிடைக்கும் எனவும் சூசகம்
வீடு கட்ட, கட்டட அனுமதி, சாலை வெட்டுக்கு பணம் வசூலிப்பதாக தி.மு.க., கவுன்சிலர் புகார் சரியாக உழைத்தால் தான் ஆட்சி கிடைக்கும் எனவும் சூசகம்
ADDED : ஜன 23, 2025 12:13 AM
வளசரவாக்கம்,வளசரவாக்கம் மண்டலக்குழு கூட்டம், அதன் தலைவர் ராஜன் தலைமையில், ஆற்காடு சாலையில் உள்ள மண்டல அலுவலகத்தில் நேற்று நடந்தது.
மண்டல உதவி கமிஷனர் உமாபதி, செயற்பொறியாளர்கள் பானுகுமார், விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், கவுன்சிலர்கள் பங்கேற்று, நிறைவேற்றப்பட்ட 33 தீர்மானங்கள் குறித்தும், வார்டின் அடிப்படை தேவைகள் குறித்தும் பேசினர்.
கவுன்சிலர்கள் பேசியதாவது:
கிரிதரன், 148வது வார்டு, அ.ம.மு.க.: வள்ளியம்மை நகர் கழிவுநீர் உந்து நிலையத்தில் குழாய் உடைந்ததை சீரமைக்கும் பணி இன்னும் முடியவில்லை. இதனால், குடியிருப்புகளில் கழிவுநீர் புகுந்து வருகிறது.
நெற்குன்றத்தில் 40 தெருக்களில், குடிநீர் இணைப்பு முழுமையாக வழங்காமலும், தண்ணீர் அழுத்தம் சோதனை செய்யாமலும் உள்ளது. இதனால், ஒப்பந்தம் விடப்பட்டும், தார் சாலை அமைக்க முடியாத நிலை உள்ளது.
நெற்குன்றம் 145வது வார்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 150 புறநோயாளிகள் தினமும் வந்து செல்கின்றனர். ஆனால், பல மாதங்களாக அங்கு, மருத்துவர் பணியிடம் காலியாக உள்ளது.
குடிநீர் வாரிய அதிகாரிகள் பதில்: இன்னும் 10 நாட்களில் வள்ளியம்மை நகர் கழிவுநீர் உந்து நிலைய பணி முடிந்துவிடும். தற்காலிகமாக, லாரி வாயிலாக கழிவுநீர் அகற்றப்பட்டு வருகிறது.
செல்வி, 149வது வார்டு, தி.மு.க.: மழைநீர் வடிகாலில் சட்ட விரோதமாக வழங்கப்படும் கழிவுநீர் இணைப்புகள் அதிகரித்துள்ளன. இதனால், மழைநீர் வடிகாலை துார்வார முடியாத நிலை உள்ளது. அடுத்த மழைக்காலத்திற்குள், மண்டலம் முழுவதும் உள்ள சட்டவிரோத கழிவுநீர் இணைப்புகளை துண்டிக்க வேண்டும்.
சத்யநாதன், 145வது வார்டு, அ.தி.மு.க.: ஆக்கிரமிப்பில் இருந்த 7 கிரவுண்ட் பொது பயன்பாட்டு இடத்தை மீட்டு, 2023ல் 49 லட்சம் ரூபாய் மதிப்பில் பூங்கா அமைக்கப்பட்டது. கடந்தாண்டு ஆக., மாதம் முதல்வர் திறந்து வைப்பார் என கூறப்பட்டது. பணி முடிந்தும், இதுவரை பூங்கா திறக்கப்படவில்லை. எதற்காக பூட்டு போட்டு உள்ளீர்கள்?
மண்டல குழு தலைவர், ராஜன், தி.மு.க.: பூங்கா கட்டப்பட்டுள்ள இடத்தை, 2016ல் மாநகராட்சிக்கு தான பத்திரம் வழங்கப்பட்டது. 2023ம் ஆண்டு வரை அங்கு பூங்கா அமைக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது.
ஆட்சி மாற்றத்திற்கு பின், தி.மு.க., அரசால் நிதி ஒதுக்கப்பட்டு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
அந்த பூங்காவை வரும் 28ல், சென்னை மாநகராட்சி மேயர் திறந்து வைக்க உள்ளார். பூங்காவில் கூடுதலாக 10 லட்சம் ரூபாய்க்கு பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
ஹேமலதா, 150வது வார்டு, தி.மு.க.: மாநகராட்சி சார்பில் சாலையோர வியாபாரிகளுக்கு வழங்கப்பட்ட சிறிய வகை கடைகள், காரம்பாக்கத்தில் உள்ள பூங்காவில் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை, குப்பை கொட்டவே மக்கள் பயன்படுத்துகின்றனர்.
சங்கர் கணேஷ், 151வது வார்டு, தி.மு.க.: வளசரவாக்கம், சுப்பிரமணியசாமி தெருவில் மூன்று மாதங்களாக குடிநீர் வரவில்லை. இதனால் மக்களுக்கு ஏற்படும் அவதியை தீர்க்க வேண்டும். மின்சார வாரிய 'மீட்டர்' தட்டுப்பாடாக உள்ளது. இதனால், மின் இணைப்புகள் வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது.
பாரதி, 152வது வார்டு, தி.மு.க.: வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள அம்பேத்கர் விளையாட்டு திடலில், தனியார் பிறந்த நாள் விழாக்கள் நடத்தப்படுகிறது.
திடலில் தனியார் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி உண்டா? அதை அதிகாரிகள் முறையாக கண்காணிக்க வேண்டும்.
மண்டல அலுவலகத்தில் உள்ள கழிப்பறை மிகவும் மோசமாக உள்ளது. அதை முறையாக பராமரிக்க வேண்டும்.
மண்டல குழு தலைவர், ராஜன்: கழிப்பறை பராமரிப்பு குறித்து, மண்டல உதவி கமிஷனர் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செல்வகுமார், 154வது வார்டு, தி.மு.க.: இந்த ஓராண்டில் செய்யப்படும் பணிகளை வைத்துதான், மீண்டும் நாம் கவுன்சிலர் ஆவதையும், தி.மு.க., ஆட்சிக்கு வருவதையும் முடிவு செய்யும்.
வீடு கட்ட, கட்டட அனுமதி, சாலை வெட்டிற்கு பணம் வாங்குகின்றனர். ஆனால், குடிநீர் வாரியம் சார்பில் மீண்டும் சாலை வெட்டிற்கு பணம் வசூலிக்கப்படுகிறது. இதனால், நடுத்தர மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
மண்டல கூட்டத்திற்கு பின், அ.தி.மு.க., கவுன்சிலர் சத்யநாதன் கூறுகையில், ''அனைத்து வார்டிலும், சாதாரணமாக கிடைக்க வேண்டிய வசதிகள், அ.தி.மு.க., எதிர்க்கட்சியாக இருப்பதால், என் வார்டில் போராடி பெறும் நிலையே உள்ளது.அரசியல் காரணங்களாலே, பூங்கா திறப்பு தள்ளிச்சென்றது,'' என்றார்.