தி.மு.க., கவுன்சிலரின் உறவினரால் தபால் ஓட்டுப்பதிவில் குளறுபடி
தி.மு.க., கவுன்சிலரின் உறவினரால் தபால் ஓட்டுப்பதிவில் குளறுபடி
ADDED : ஏப் 15, 2026 10:16 PM
அம்பத்துார்: தி.மு.க., கவுன்சிலரின் உறவினரால், அம்பத்துாரில் நடந்த தபால் ஓட்டுப்பதிவில் குளறுபடி நடந்துள்ளதாகவும், அதனால், மறு ஓட்டுப்பதிவு நடத்த வேண்டும் எனவும், எதிர்கட்சிகள் கண்டன குரல் எழுப்பியுள்ளன.
திருவள்ளூர் மாவட்டம், அம்பத்துார் தொகுதி ஓட்டுச்சாவடி பணியாளர்களுக்கான தேர்தல் சம்பந்தமான பயிற்சி, கொரட்டூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது. இதில், 1,200க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பங்கேற்றனர்.
பயிற்சி வகுப்புகள் இடையே அனைவருக்கும், தபால் ஓட்டுகள் வழங்கப்பட்டன. அவற்றை, பணியாளர்கள் பூர்த்தி செய்து, அந்தந்த தொகுதிக்கான ஓட்டு பெட்டிகளில் போட்டனர்.
இந்நிலையில், அம்பத்துார் மண்டலம், 89வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் சேகரின் உறவினரான பெண் வழக்கறிஞர் ஒருவர், தபால் ஓட்டு பதிவு செய்யும் பகுதியில் நேற்று சுற்றித்திரிந்தார். ஓட்டளிக்க செல்வோரை தனியே அழைத்து பேசிய அவர், ஆலோசனை வழங்குவதுபோல், ஓட்டு வேட்டை நடத்தினார்.
சில நிமிடங்கள் கழித்து, அங்கு வந்த அதிகாரிகள், தி.மு.க., கவுன்சிலரின் உறவினர் பெண்ணை அங்கிருந்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். எனினும், அவர் அதே பகுதியில் சுற்றித்திரிந்து, தி.மு.க.,வுக்கு ஆதரவாக ஓட்டு சேகரித்தார்.
தபால் ஓட்டு பதிவு செய்யும் இடத்தில், கட்சி நிர்வாகிகள் யாருக்கும் அனுமதி வழங்கப்படாத நிலையில், அவர் மட்டுமே அப்பகுதியில் சுற்றித்திரிந்தது, சரியான முறையில் ஓட்டுப்பதிவு நடந்ததா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதேபோல் பலரும், தாங்கள் யாருக்கு ஓட்டளித்தோம் என்பதை மொபைல் போன்களில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர்.
தேர்தல் அதிகாரிகளின் அலட்சியப்போக்கால் இது போன்ற குளறுபடிகள் நடந்துள்ளன. முறையாக நடக்காத இந்த தபால் ஓட்டுகளை ரத்து செய்து, வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கும் மூன்றாம் கட்ட பயிற்சியின்போது, அனைவரும் மீண்டும் ஓட்டளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என, எதிர்கட்சிகள் கண்டன குரல் எழுப்பியுள்ளனர்.
