ADDED : ஏப் 02, 2026 04:58 PM

சென்னை:சைதாப்பேட்டையில் தி.மு.க., தேர்தல் பணிமனையை, அக்கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் திறந்து வைத்தனர்.
தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், சைதாப்பேட்டை தொகுதியில் மீண்டும் தி.மு.க., வேட்பாளராக போட்டியிடுகிறார்.
தெரு வாரியாக பிரச்னைகளுக்கு தீர்வு கண்டது, தொகுதியில் பல்நோக்கு மருத்துவமனை துவக்கியது, நந்தனம் கலைக் கல்லுாரியை மேம்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை எடுத்துக்கூறி, ஓட்டு சேகரித்து வருகிறார்.
இந்நிலையில், சைதாப்பேட்டையில் தி.மு.க., தேர்தல் பணிமனையை நேற்று முன்தினம், கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் திறந்து வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில், தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் மகேஷ்குமார், அவை தலைவர் குணசேகரன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தொடர்ந்து, சைதாப்பேட்டை ஐந்துவிளக்கு பகுதியில், நேற்று ஓட்டு சேகரித்தபோது, அமைச்சர் சுப்பிரமணியன் பேசியதாவது:
சைதாப்பேட்டை தொகுதியில், 1977ல் இருந்து அரசியலில் ஈடுபட்டு வருகிறேன். எப்போதும் இல்லாத அளவுக்கு, தமிழக அரசின் நலத்திட்டங்களால் மக்களிடையே வரவேற்பு அதிகரித்துள்ளது. தி.மு.க., தேர்தல் அறிக்கையும் மக்களை கவர்ந்துள்ளது. மக்களே, தன்னிச்சையாக வரவேற்பு அளிக்கின்றனர். எதிர்கட்சிகளை பலமானர்கள் என்று நினைத்தே பணியாற்றி வருகிறோம். நிச்சயம் மிகப்பெரிய வெற்றி பெறுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
