ADDED : ஜன 11, 2025 12:21 AM

சென்னை: ''யு.ஜி.சி., வரைவு விதிமுறைகளை திரும்ப பெறும் வரை, மத்திய அரசிற்கு எதிராக, அனைத்து மாவட்டங்களிலும், போராட்டம், கருத்தரங்கம் தொடரும்,'' என, தி.மு.க., மாணவரணி மாநில செயலர் எழிலரசன் எம்.எல்.ஏ., கூறினார்.
பல்கலை மானியக்குழுவின் புதிய விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க., மாணவர் அணி சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில், இந்திய மாணவர் சங்கம், திராவிட மாணவர் கழகம், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், முஸ்லிம் மாணவர் அமைப்பு, சமூகநீதி மாணவர் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு மாணவர் அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்த, மாணவர் அணி செயலர் எழிலரசன் எம்.எல்.ஏ., பேசுகையில், ''பல்கலை உரிமையை எப்போதும் விட்டுக்கொடுக்கமாட்டோம். இந்த போராட்டம் ஒரு துவக்கம் தான். பல்கலை மானியக்குழுவின் வரைவு வழிகாட்டு நெறிமுறை உத்தரவுகளை திரும்பப் பெறும்வரை போராட்டங்கள் தொடரும்,'' என்றார்.

