/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிகிச்சைக்கு வந்த பெண் மூளைச்சாவு ரூ.10 லட்சம் வழங்க டாக்டர்களுக்கு உத்தரவு
/
சிகிச்சைக்கு வந்த பெண் மூளைச்சாவு ரூ.10 லட்சம் வழங்க டாக்டர்களுக்கு உத்தரவு
சிகிச்சைக்கு வந்த பெண் மூளைச்சாவு ரூ.10 லட்சம் வழங்க டாக்டர்களுக்கு உத்தரவு
சிகிச்சைக்கு வந்த பெண் மூளைச்சாவு ரூ.10 லட்சம் வழங்க டாக்டர்களுக்கு உத்தரவு
ADDED : செப் 09, 2025 01:21 AM
சென்னை 'தலைவலி சிகிச்சைக்கு வந்த பெண் மூளைச்சாவு ஏற்பட்டு மரணமடைந்த விவகாரத்தில், அலட்சியம் காட்டிய டாக்டர்கள், 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்' என, மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை திருவான்மியூர் பகுதியை சேர்ந்த 'பெல்' நிறுவன ஊழியர் போஜய்யா என்பவர், மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் தாக்கல் செய்த மனு:
என் மனைவி தேவேந்திரம்,38, மூக்கடைப்பு மற்றும் கடும் தலைவலி காரணமாக, 2005, அக்., 6ல், சென்னை வடபழனியில் உள்ள விஜயா மருத்துவமனையின் ஒரு பிரிவாக செயல்படும், டாக்டர் சத்யநாராயணா காது, மூக்கு, தொண்டை ஆராய்ச்சி அமைப்பின் டாக்டர் ரங்கா ராவிடம் சிகிச்சைக்கு சென்றார். மருத்துவ குழு ஆலோசனைக்கு பின், தேவேந்திரம் 'எண்டோஸ்கோபி' சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
அப்போது, திடீரென இதயம் செயலிழந்து, மூளைச்சாவு அடைந்துவிட்டதாக கூறி, தேவேந்திரத்தை, மருத்துவர்கள், வென்டிலேட்டரில் வைத்தனர். பின், அக்., 12ம் தேதி, மனைவி தேவேந்திரம் இறந்துவிட்டதாக, டாக்டர்கள் தெரிவித்தனர்.
சிகிச்சைக்காக, என் மனைவி மருத்துவமனைக்கு, நல்ல உடல் நலத்துடன் வந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நான்கு மணி நேரத்தில், அவரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்கு முன் எந்த சோதனையும் நடத்தாமல், அவசரமாக மயக்க மருந்து கொடுத்துள்ளனர். மூளை சாவு ஏற்பட இதுவே முக்கிய காரணியாக இருந்திருக்கலாம்.
எனவே, அலட்சியமாக செயல்பட்ட டாக்டர்கள், மருத்துவமனை நிர்வாகம் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை, ஆணைய தலைவர் நீதிபதி ஆர்.சுப்பையா விசாரித்தார். மனுதாரர் போஜய்யா தரப்பில், வழக்கறிஞர் தேன்மொழி சிவபெருமாள் ஆஜராகி, ''அறுவை சிகிச்சை செய்த டாக்டர்களுக்கு, போதிய நிபுணத்துவம் இல்லை. மனுதாரரின் மனைவி இறந்ததும், பொறுப்பை தட்டி கழிக்கும் விதமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்,'' என்றார்.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
காலை சிற்றுண்டிக்கு பின், குறைந்தபட்சம் ஆறு மணி நேரம் கழித்தே மயக்க மருந்து கொடுக்கப்பட வேண்டும் என்ற மருத்துவ நடைமுறை பின்பற்றப்படவில்லை. டாக்டர்கள் அலட்சியமே மரணத்துக்கு காரணம் என்பது, ஆவணங்கள் வாயிலாக உறுதி செய்யப்படுகிறது.
தேவேந்திரத்துக்கு சிகிச்சை அளித்த டாக்டர் ரங்கா ராவ் இறந்துவிட்டார். எனவே, காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர் எம்.ஜெயராமி ரெட்டி, மயக்கவியல் நிபுணர் ஏ. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர், இழப்பீட்டு தொகையாக 10 லட்சம் ரூபாயும், வழக்கு செலவு தொகையாக 50 ஆயிரம் ரூபாயும், மனுதாரர் போஜய்யா, அவரது குழந்தைகளுக்கு, எட்டு வாரங்களுக்குள் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.