அன்னதானம் பரிமாறியவருக்கு கத்திக்குத்து: ரவுடி சிக்கினார்
அன்னதானம் பரிமாறியவருக்கு கத்திக்குத்து: ரவுடி சிக்கினார்
ADDED : செப் 20, 2026 04:22 PM
ராமாபுரம்: விநாயகர் கோவிலில் அன்னதானம் பரிமாறியவரை கத்தியால் குத்திய ரவுடி தங்கராச, 32, என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கூட்டாளிகள் இருவரை தேடி வருகின்றனர்.
ராமாபுரம், திருமலை நகர், நேதாஜி நகரைச் சேர்ந்தவர் கார்த்திக், 40. இவர், சினிமா துறையில் பணிபுரிகிறார். கடந்த 14ம் தேதி மதியம், இவரது வீட்டின் அருகே உள்ள வரசக்தி விநாயகர் கோவில் முன், அன்னதானம் நடந்தது; கார்த்திக் உணவு பரிமாறிக் கொண்டிருந்தார்.
அப்போது, ஆட்டோவில் வந்த மூன்று பேர், அங்கு வரிசையில் நின்றவர்களிடம் வீண்தகராறில் ஈடுபட்டு, ரவுடிசத்தில் ஈடுபட்டுள்ளனர். இதை, உணவு பரிமாறிக்கொண்டிருந்த தினேஷ் என்பவர் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கார்த்திக் இருதரப்பையும் சமாதானப்படுத்த முயன்றார். ஆனால், மூன்று பேரும் சேர்ந்து கார்த்திக்கை தகாத வார்த்தை பேசியதுடன், அதில் ஒருவர் கார்த்திக்கை கத்தியால் குத்தினார். தடுக்க முயன்ற நிதீஷ் என்பவருக்கும், வெட்டு விழுந்தது. பின் மூன்று பேரும், ஆட்டோவில் தப்பி சென்றனர்.
இது குறித்து ராமாபுரம் போலீசார் விசாரித்தனர். இதில், கத்தியால் கார்த்திக்கை குத்தியது, அய்யப்பன்தாங்கல், அடுத்த கொளுத்துவாஞ்சேரியைச் சேர்ந்த ராஜா என்ற தங்கராசா, 32, என்பது தெரிய வந்தது. அவரை நேற்று கைது செய்தனர்.
இவர் மீது, கொலை முயற்சி, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட 14 வழக்குகள் உள்ளன. தலைமறைவாக உள்ள இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
