புதைவட மின் கேபிளை மாற்றி அமைக்காமல் வடிகால் கட்டுவதால் எதிர்காலத்தில் சிரமம்
புதைவட மின் கேபிளை மாற்றி அமைக்காமல் வடிகால் கட்டுவதால் எதிர்காலத்தில் சிரமம்
ADDED : செப் 10, 2026 04:31 PM

வளசரவாக்கம்: போரூர் முதல் வடபழனி வரையிலான ஆற்காடு சாலையில், புதைவட மின் கேபிளை அகற்றாமல், அதன் மீது மழைநீர் வடிகால் கட்டப்பட்டு வருவது, பகுதிமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அதிகாரிகளின் இந்த அலட்சியப்பணியால், எதிர்காலத்தில் மின் கேபிளில் பழுது ஏற்பட்டால், அதை சீரமைப்பதில் சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளது.
போரூர், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், பூந்தமல்லி, கிண்டி, கோடம்பாக்கம், அண்ணா சாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளை, ஆற்காடு சாலை இணைக்கிறது.
இதில், போரூர் முதல் வளசரவாக்கம் அடுத்த ஆழ்வார் திருநகர் வரையிலான சாலை, நெடுஞ்சாலைத் துறை பராமரிப்பிலும், ஆழ்வார் திருநகர் முதல் கோடம்பாக்கம் வரையிலான சாலை மாநகராட்சி பராமரிப்பிலும் உள்ளது.
இந்நிலையில், போரூர் சந்திப்பு முதல் வடபழனி வரை, ஆற்காடு சாலையின் இருபுறமும், மாநகராட்சி சார்பில் 108 கோடி ரூபாய் செலவில், மழைநீர் வடிகால் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன.
இதில், வளசரவாக்கம் ஆழ்வார் திருநகர் பகுதியில், தனியார் பள்ளி அருகே அமைக்கப்பட்டு வரும் வடிகால் பணியில், அதிகாரிகள் கண்காணிப்பு இல்லாததால், எதிர்காலத்தில் மக்களுக்கு சிரமம் ஏற்படும் நிலை உள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:
தனியார் பள்ளி அருகே, நிலத்திற்கடியில் புதைவட மின் கேபிள் பதிக்கப்பட்டுள்ள நிலையில், அதை மாற்றி அமைக்காமல், அதன்மீது வடிகால் கட்டப்பட்டு வருகிறது.
இதனால், எதிர்காலத்தில் மின் கேபிளில் பழுது ஏற்பட்டால், வடிகாலை முழுதாக உடைக்க வேண்டிவரும். தவிர, மின் கேபிள் சேதமடைந்தால் அதை சீரமைக்கவோ, மாற்றியமைக்கவோ முடியாத நிலை ஏற்படும்.
இதுபோன்ற பிரச்னைகளை தவிர்க்க, மாநகராட்சி, நெடுஞ்சாலைத் துறை மற்றும் மின் வாரிய அதிகாரிகள் முறையாக கண்காணிக்க வேண்டும்.
ஆனால், அதிகாரிகள் உரிய முறையில் மேற்பார்வை செய்யாததால், பல மீட்டர் துாரத்திற்கு புதைவட மின் கேபிளின் மீது மழைநீர் வடிகால் கட்டப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘மின் கேபிள் அகற்றி விட்டுதான், மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடந்து வருகிறது’ என்றனர்.
ஆனால், புதைவட மின் கேபிள் மீது கான்கிரீட் கலவை கொட்டி, மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளதற்கு என்ன தீர்வு என்பது குறித்து, அதிகாரிகள் பதில் அளிக்கவில்லை.
