ADDED : செப் 28, 2026 06:13 PM
சென்னை, செப். 29–
குழாய் பதிப்பு பணி முடிந்ததால், அடையாறு, பெருங்குடி மண்டலத்தில் குடிநீர் வினியோகம் சீரானது என, குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்தி குறிப்பு:
சோழிங்கநல்லுார், டி.என்.எச்.பி சாலையில் கால்வாய் கட்டும் பணிக்காக, 1,400 எம்.எம்., விட்டம் கொண்ட குடிநீர் குழாய் மாற்றி அமைக்கும் பணி, கடந்த, 20ம் தேதி துவங்கி, பத்து நாட்கள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
இதனால், அடையாறு, பெருங்குடி மண்டலத்திற்கு, கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்திற்கு பதில், செம்பரம்பாக்கம் நிலையத்தில் இருந்து குடிநீர் வினியோகிக்கப்பட்டது. இந்நிலையில் இரவு, பகலாக பணி நடைபெற்று குழாய் பதிப்பு முடிக்கப்பட்டது. இதனால், நேற்று முதல், கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் இருந்து சீரான குடிநீர் வினியோகம் வழங்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
