/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மூதாட்டியிடம் ரூ.600 ஆசைகாட்டி ரூ.4,000 பறித்த ஓட்டுநர் கைது
/
மூதாட்டியிடம் ரூ.600 ஆசைகாட்டி ரூ.4,000 பறித்த ஓட்டுநர் கைது
மூதாட்டியிடம் ரூ.600 ஆசைகாட்டி ரூ.4,000 பறித்த ஓட்டுநர் கைது
மூதாட்டியிடம் ரூ.600 ஆசைகாட்டி ரூ.4,000 பறித்த ஓட்டுநர் கைது
ADDED : அக் 31, 2025 01:26 AM

சென்னை:  மூதாட்டியின் கவனத்தை திசை திருப்பி, பணம் மற்றும் ஆவணங்கள் அடங்கிய பையை திருடிச் சென்ற ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
கோட்டூர்புரம், சித்ரா நகரைச் சேர்ந்தவர் நீலா, 72. கடந்த 21ம் தேதி கோட்டூர்புரம், பிள்ளையார் கோவில் அருகே நின்று கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த ஆட்டோ ஓட்டுநர், 'தன் முதலாளி வெளிநாடு செல்வதால் சாப்பாடு போட்டு, 600 ரூபாய் கொடுக்கிறார்;
'தன்னுடன் வந்தால் அதை வாங்கி தருகிறேன்' எனக் கூறியுள்ளார். இதை நம்பிய மூதாட்டி, அவருடன் ஆட்டோவில் ஏறிச் சென்றுள்ளார்.
கோட்டூர்புரம், பொன்னியம்மன் கோவில் தெருவில் மூதாட்டியை இறக்கி, அருகில் உள்ள ஒரு வீட்டை காண்பித்து 'இங்கு தான் சாப்பாடு கொடுக்கின்றனர்; உங்களது பையை இங்கே வைத்துவிட்டு செல்லுங்கள்; நான் பார்த்துக் கொள்கிறேன்' என, ஆட்டோ ஓட்டுநர் கூறியுள்ளார்.
மூதாட்டி சற்று துாரம் நகர்ந்ததும், 4,000 ரூபாய், ஆதார், ரேஷன்கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் அடங்கிய பையுடன், ஆட்டோ ஓட்டுநர் அங்கிருந்து தப்பினார்.
இது குறித்த புகாரின்படி, கண்காணிப்பு கேமராவில் பதிவான ஆட்டோவின் எண்ணை வைத்து, கோட்டூர்புரம் போலீசார் விசாரித்தனர்.
இதில் வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சுந்தர், 36 என்பவர் மூதாட்டியிடம் கைவரிசை காட்டியது தெரியவந்தது. நேற்று அவரை கைது செய்த போலீசார், 4,000 ரூபாயும், ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட சுந்தர் மீது, ஏற்கனவே செம்மஞ்சேரி மற்றும் மதுரவாயல் காவல் நிலையங்களில் திருட்டு மோசடி வழக்கு உட்பட, ஐந்து குற்ற வழக்குகள் இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

