/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஓ.எம்.ஆரில் திடீர் பள்ளத்தில் குப்புற விழுந்த கார் காயங்களுடன் ஓட்டுநர் தப்பினார்; கடும் போக்குவரத்து நெரிசல்
/
ஓ.எம்.ஆரில் திடீர் பள்ளத்தில் குப்புற விழுந்த கார் காயங்களுடன் ஓட்டுநர் தப்பினார்; கடும் போக்குவரத்து நெரிசல்
ஓ.எம்.ஆரில் திடீர் பள்ளத்தில் குப்புற விழுந்த கார் காயங்களுடன் ஓட்டுநர் தப்பினார்; கடும் போக்குவரத்து நெரிசல்
ஓ.எம்.ஆரில் திடீர் பள்ளத்தில் குப்புற விழுந்த கார் காயங்களுடன் ஓட்டுநர் தப்பினார்; கடும் போக்குவரத்து நெரிசல்
UPDATED : மே 18, 2025 04:22 AM
ADDED : மே 17, 2025 10:05 PM

சென்னை:
சென்னை, ஓ.எம்.ஆர்., எனும் பழைய மாமல்லபுரம் சாலை, சோழிங்கநல்லுாரைச்
சேர்ந்தவர் மரியதாஸ், 47; டிராவல்ஸ் நிறுவனத்தில் வாடகை கார் ஓட்டுகிறார்.
சோழிங்கநல்லுாரை
சேர்ந்த விக்னேஷ், 45, அவரது மனைவி, இரண்டு குழந்தைகளுடன் வெளியூருக்கு
ரயிலில் செல்ல திட்டமிட்டிருந்தார். சென்ட்ரல் ரயில் நிலையம் செல்ல நேற்று
வாடகை கார் வரவழைத்தார். மரியதாஸ் ஓட்டி வந்த காரில், விக்னேஷ்
மற்றும்குடும்பத்தினர் நான்கு பேரும் சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கி
புறப்பட்டனர்.
மாலை 6:30 மணிக்கு, ஓ.எம்.ஆர்., டைடல் பார்க்
சிக்னல் அருகே கார் சென்று கொண்டிருந்தபோது, சாலை உள்வாங்கி திடீரென ராட்சத
பள்ளம் விழுந்தது.
ஓட்டுனர் மரியதாஸ் சுதாரிப்பதற்குள், பள்ளத்தில்
கார் குப்புற கவிழ்ந்து சிக்கியது. அவ்வழியே சென்றோர் இதை பார்த்து,
காரினுள் சிக்கிய ஐந்து பேரையும் பத்திரமாக மீட்டு, வெளியே கொண்டு வந்தனர்.
இதில் ஓட்டுநர் மரியதாஸுக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது. மற்ற நான்கு பேருக்கும் காயமின்றி தப்பினர்.
தகவலறிந்து
வந்த போக்குவரத்து போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ரயிலுக்கு
நேரமானதால், விக்னேஷ் குடும்பத்தினரை மாற்று வாகனம் வரவழைத்து, சென்ட்ரல்
ரயில் நிலையத்திற்கு அனுப்பினர். தொடர்ந்து, கிரேன் இயந்திரம் வரவழைத்து,
ராட்சத பள்ளத்தில் சிக்கியிருந்த காரை மீட்டனர்.
சம்பவம் நடந்தது
மாலை நேரம் என்பதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பணி
முடிந்து வாகனங்களில் வீடு திரும்பியோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இதையடுத்து, மத்திய கைலாஷில் இருந்து துரைப்பாக்கம் நோக்கி சென்ற வாகனங்களை, திருவான்மியூர் வழியாக போலீசார் திருப்பி விட்டனர்.
சாலை
உள்வாங்கி ஏற்பட்ட பள்ளத்தில் இருந்து சில அடி துாரத்தில், மெட்ரோ ரயில்
வழித்தடத்திற்காக சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடக்கிறது. அப்பணியின்
அழுத்தம் காரணமாக, பள்ளம் விழுந்திருக்கலாம் என கூறப்பட்டது. ஆனால் இதை,
மெட்ரோ ரயில் நிர்வாகம் மறுத்துள்ளது. எனினும், பள்ளம் விழுந்த காரணம்
குறித்து விசாரணை நடந்து வருகிறது.