/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஓட்டுனர் இல்லாத ரயில் மெட்ரோவில் தயார்
/
ஓட்டுனர் இல்லாத ரயில் மெட்ரோவில் தயார்
ADDED : செப் 23, 2024 06:28 AM

சென்னை : சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இரண்டாம் கட்ட வழித்தடத்தில், மூன்று பெட்டிகளுடன் கூடிய, ஓட்டுனர் இல்லாத 36 ரயில்களை இயக்கும் திட்டத்திற்காக, 'அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா' நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இந்நிறுவனம் முதலில், ஒரு ரயிலின் பெட்டிகளை தயாரிக்கும் பணியை, கடந்த பிப்., 8ம் தேதி துவங்கியது. பெட்டி தயாரிப்பு பணிகளை முடித்து, அதில் பல்வேறு கருவிகளை பொருத்தும் பணிகள் நடந்தன.
அனைத்து பணிகளையும் நிறைவு செய்துள்ள ஒப்பந்த நிறுவனம், முதல் ஆளில்லா ரயிலை, சோதனை தடத்திற்கு நேற்று அனுப்பியது.
மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறுகையில், 'இந்த ரயில், உற்பத்தியாளர் வளாகத்தில் அனைத்து நிலை சோதனைகளுக்கும் உட்படுத்தப்படும்.
'பின், பூந்தமல்லி மெட்ரோ ரயில் பணிமனைக்கு அனுப்பி, அங்கிருந்து மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட வழித்தடத்தில் சோதனை ஓட்டத்தில் பங்கேற்கும். அதில் வெற்றியடைந்து, சட்டப்படியான ஒப்புதலைப் பெற்று, பயணியர் சேவையில் ஈடுபடுத்தப்படும்' என்றனர்.