/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நடவடிக்கை தீவிரமடையாததால் குடிநீர் வாரிய வரி வசூல்...குறையுது!:அரசு துறைகளுக்கு ‛நேர்முக வேண்டுகோள் விடுக்க முடிவு
/
நடவடிக்கை தீவிரமடையாததால் குடிநீர் வாரிய வரி வசூல்...குறையுது!:அரசு துறைகளுக்கு ‛நேர்முக வேண்டுகோள் விடுக்க முடிவு
நடவடிக்கை தீவிரமடையாததால் குடிநீர் வாரிய வரி வசூல்...குறையுது!:அரசு துறைகளுக்கு ‛நேர்முக வேண்டுகோள் விடுக்க முடிவு
நடவடிக்கை தீவிரமடையாததால் குடிநீர் வாரிய வரி வசூல்...குறையுது!:அரசு துறைகளுக்கு ‛நேர்முக வேண்டுகோள் விடுக்க முடிவு
ADDED : அக் 14, 2024 03:02 AM

நடவடிக்கையில் அலட்சியம், இதர அரசு துறைகள் நிலுவை அதிகரிப்பு காரணமாக நடப்பு நிதியாண்டில், குடிநீர் வாரியத்தில் வரி வசூல் குறைந்துள்ளது. இணைப்பு துண்டிப்பு, சீல், ஜப்தி நடவடிக்கையை தீவிரப்படுத்தி, அரசு துறைகளுக்கு, நேர்முக வேண்டுகோள் கடிதம் அனுப்பி வரி வசூலை அதிகரிக்க, வாரியம் முடிவு செய்துள்ளது.
சென்னை குடிநீர் வாரியம் வாயிலாக, 15 மண்டலங்களில் குழாய் மற்றும் லாரி வழியாக, தினமும் 106 கோடி லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. பற்றாக்குறையைப் போக்க, கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் வழியாகவும், தினசரி குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.
மாநகராட்சியில், 13.85 லட்சம் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள் உள்ளன. 13.96 லட்சம் பேர் வரியும், 9.13 லட்சம் பேர் கட்டணமும் செலுத்தி வருகின்றனர்.
இதன் வாயிலாக, ஆண்டிற்கு வரி மற்றும் கட்டணமாக, 1,025 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. கடந்த 2022 - 23ம் நிதியாண்டில், 892 கோடி ரூபாய் மற்றும் 2021- - 22ம் ஆண்டு வரை நிலுவை தொகை, 368 கோடி ரூபாய் சேர்த்து, 1,260 கோடி ரூபாய் வசூலாக வேண்டும்.
இதில், 1,110 கோடி ரூபாய் வசூலானது. இது, 2021 - -22 நிதியாண்டை விட, 293 கோடி ரூபாய் அதிகம். குடிநீர் வாரியத்தில் முதல் முறையாக, 2022 - -23ம் நிதியாண்டில், 1,000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலானது.
கடந்த 2023- - 24ம் நிதியாண்டில், 1,025 கோடி ரூபாயும், 2022 - -23ம் நிதியாண்டு நிலுவை, 290 கோடி ரூபாய் சேர்த்து, 1,315 கோடி ரூபாய் வசூலாக வேண்டும்.
இதில் வரி, கட்டணமாக 1,064.82 கோடி ரூபாய், அபராதம் 23.70 கோடி ரூபாய் மற்றும் லாரி குடிநீர் வாயிலாக, 20.03 கோடி ரூபாய் சேர்த்து, 1,108.55 கோடி ரூபாய் வசூலானது.
ஆனால், கடந்த நிதியாண்டை விட, 1.48 கோடி ரூபாய் வசூல் குறைந்தது.
லோக்சபா தேர்தல் காரணமாக, வசூல் குறைந்ததாக அதிகாரிகள் நம்பினர். அதே வேளையில், கடந்த நிதி ஆண்டுகளில், 50 முதல் 60 சதவீதம் வரை வசூலான நிலுவை தொகை, 2023 - -24ம் நிதியாண்டில், 75 சதவீதம் வசூலானது.
இந்நிலையில், 2024 - 25ம் நிதியாண்டு, முதல் அரையாண்டில் 552 கோடி ரூபாய் வசூலானது. இது, 2023 - 24 முதல் அரையாண்டை விட, 20 கோடி ரூபாய் குறைவு.
முன்பை விட, இணைப்பு துண்டிப்பு, சீல், ஜப்தி போன்ற நடவடிக்கைகள் கணிசமாக குறைந்ததாகவும், அதே வேளையில் அரசு துறைகள், 101 கோடி ரூபாய் நிலுவை வைத்துள்ளதாலும், வரி வசூல் குறைந்ததாக, வாரிய அதிகாரிகள் கூறினர்.
அரசு துறைகளை பொறுத்தவரை, மாநில அரசுகள் 79.11 கோடி ரூபாய் நிலுவை வைத்துள்ளன.
இதில் உள்ளாட்சி அமைப்புகள், வீட்டுவசதி, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், காவல் துறை அதிக நிதி நிலுவை வைத்துள்ளன.
அதேபோல், மத்திய அரசு துறைகள், 22.57 கோடி ரூபாய் நிலுவை வைத்துள்ளன. இதில், ரயில்வே உள்ளிட்ட துறைகள் அதிக நிதி நிலுவை வைத்துள்ளன.
இதுகுறித்து, குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
வரியில் தான் குடிநீர், கழிவுநீர் சேவை, ஊதியம், ஓய்வூதியம் வழங்க வேண்டும். சாதாரண மக்கள் நடவடிக்கைக்கு முன்பே வரி செலுத்துகின்றனர்.
ஆனால் மக்கள் பிரதிநிதிகள், சில முன்னாள், இன்னாள் உயரதிகாரிகள் கொடுக்கும் அழுத்தத்தால் லட்சம், கோடி என நிலுவை வைத்துள்ளவர்களிடம் வசூலிக்க முடியவில்லை.
இணைப்பு துண்டிப்பு, சீல், ஜப்தி நடவடிக்கைக்கு தலையீடு இல்லாமல் சுதந்திரம் வழங்கினால், வரி வசூல் இலக்கை அடைய முடியும். அரசு துறைகளுக்கு, 'டெமி அபீஷியல் லெட்டர் வழங்க முடிவு' செய்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -