ADDED : செப் 30, 2025 02:39 AM

கொரட்டூர்:ஜவுளிக்கடையில், 2 வயது குழந்தையின் செயின் திருடிய 'பலே' மூதாட்டியை போலீசார் கைது செய்தனர்.
தாம்பரம் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தகுமார், 29; ஐ.டி., நிறுவன ஊழியர். இவர், தன் மனைவி மற்றும் 2 வயது பெண் குழந்தையுடன், கொளத்துாரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று, பாடி சரவணா ஸ்டோர் கடைக்கு, நேற்று முன்தினம் இரவு சென்றுள்ளார்.
கடையின் ஐந்தாவது மாடியில், ஆனந்த குமாரும், அவரது மனைவியும் பொருட்களை வாங்கி கொண்டிருந்தபோது, அவர்களது 2 வயது பெண் குழந்தையை, அங்கு வந்த மூதாட்டி துாக்கி கொஞ்சி விளையாடியுள்ளார்.
பெற்றோரின் கவனம் சிறிது திசை திரும்பிய நேரம், குழந்தையை கீழே விட்டு விட்டு மூதாட்டி வேகமாக சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து, குழந்தையின் கழுத்தில் இருந்த 2 சவரன் செயின் காணாமல் போனது தெரிந்தது. இது குறித்து, கொரட்டூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
கொரட்டூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் மற்றும் போலீசார், கடையில் உள்ள 'சிசிடிவி' கேமரா காட்சி பதிவுகளை ஆராய்ந்தனர். அதில், குழந்தையை துாக்கி கொஞ்சிய மூதாட்டி, குழந்தையின் கழுத்தில் கிடந்த செயினை திருடிச் சென்றது தெரிந்தது.
விசாரணையி ல், திருட்டில் ஈடுபட்டது திருவொற்றியூர், ராஜா கடை பகுதியைச் சேர்ந்த ஜெயந்தி, 61, என்பது தெரிய வந்தது. நேற்று மாலை போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து, குழந்தையின் செயின் உட்பட, 3 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஜெயந்தி பிரபல ஜவுளி கடைகளுக்குள் சென்று, பெண்கள் மற்றும் குழந்தைகளை குறிவைத்து, அவர்கள் அணிந்திருக்கும் நகை, கைப்பை உள்ளிட்டவற்றை திருடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தது விசாரணையில் தெரிய வந்தது.
ஜெயந்தியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், நேற்று மாலை சிறையில் அடைத்தனர்.