சதிகாரர்களுக்கு துணைபோகும் தேர்தல் கமிஷன்: ராமதாஸ்
சதிகாரர்களுக்கு துணைபோகும் தேர்தல் கமிஷன்: ராமதாஸ்
ADDED : மார் 26, 2026 11:10 PM
சென்னை:சதிகாரர்களின் சதி செயலுக்கு தேர்தல் கமிஷன் துணை போவதாக, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
கடந்த 1989ல் பா.ம.க.,வை துவங்கினேன். தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக, கட்சியை வளர்த்தெடுத்தேன். என்னால் வளர்க்கப்பட்டவர்கள், என்னை புறந்தள்ளி, போலியான ஆவணங்களை உருவாக்கி, பா.ம.க.,வை அபகரிக்கத் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர்.
என்னால் உருவாக்கப்பட்ட பா.ம.க.,வையும், அதன் கொடி, சின்னத்தையும், அவர்கள் பயன்படுத்தக்கூடாது என்பதற்காக, பலமுறை நீதிமன்றங்களில் முறையிட்டும், சதிகாரர்களின் சதிச் செயலுக்கு துணை போகும் வகையில், தேர்தல் கமிஷன் நடவடிக்கைகள் உள்ளன.
கட்சியை அபகரிக்க நினைப்பவர்களுக்கு ஆதரவாக, சிவில் நீதிமன்றத்தில் தேர்தல் கமிஷன் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அங்கீகாரமற்ற கட்சியான பா.ம.க.,வுக்கு சின்னம் வழங்குவது தொடர்பாக, ஜனநாயகமாக செயல்பட வேண்டிய தேர்தல் கமிஷன் தன்னிச்சையாக முடிவெடுத்திருப்பது, ஜனநாயக படுகொலை. ஜனநாயகத்திற்கும் நீதிக்கும் எதிரான தேர்தல் கமிஷனின் செயல் கண்டனத்திற்குரியது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
***
