தபால் ஓட்டு போடுவதில் தேர்தல் பணி ஊழியர்கள் ஆர்வம்
தபால் ஓட்டு போடுவதில் தேர்தல் பணி ஊழியர்கள் ஆர்வம்
ADDED : ஏப் 15, 2026 04:04 PM
திருவொற்றியூர்: திருவொற்றியூர் சட்டசபை தொகுதியில், 344 ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடக்கவிருக்கிறது. இதற்காக, 1,250க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அவர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி முகாம், நேற்று காலை திருவொற்றியூர் - பெரியார் நகர், அரசு உதவிபெறும் தனியார் பள்ளியில் நடந்தது.
தேர்தல் பணியில் ஈடுபட உள்ள, பிற தொகுதி மற்றும் மாவட்டங்களைச் சேர்ந்த ஊழியர்களுக்கு தபால் ஓட்டு போடும் பணி, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மதியம் துவங்கியது. அதன்படி, திருவொற்றியூர் தொகுதி தவிர்த்து, திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட, ஒன்பது தொகுதிகளுக்கு பெட்டி வைக்கப்பட வேண்டும்.
ஆவடி தொகுதி ஊழியர்கள் யாரும் இல்லை. எனவே, அந்த தொகுதியை தவிர்த்து, எட்டு பெட்டிகள் வைக்கப்பட்டன. தவிர, பிற மாவட்டத்தைச் சேர்ந்த ஊழியர்களுக்கென மொத்தமாக ஒரு பெட்டி வைக்கப்பட்டது.
அதன்படி, ஒன்பது பெட்டிகளில், தேர்தல் பணியில் ஈடுபடவிருக்கும் ஊழியர்கள், தங்கள் ஓட்டுகளை செலுத்தினர். இதில், 1,250 ஊழியர்களில், 800க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தபால் ஓட்டளித்துள்ளனர் என, தேர்தல் நடத்தும் அதிகாரி பத்மநாபன் தெரிவித்தார்.
தவிர, தொகுதிக்குட்பட்ட இடங்களில் வசிக்கும், 85 வயதுக்கு மேல் நடக்க முடியாத முதியோர், மாற்றுத்திறனாளிகள் வீட்டிற்கே சென்று ஓட்டு பெறும் பணி, இரு தினங்களாக நடந்தது. அதன்படி, 160 ஓட்டுகளில், 149 ஓட்டுகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
