/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னையில் மின்சார பஸ்கள் இயக்கம்...45 வழித்தடங்கள் :புறநகரையும் சேர்த்து பட்டியல் வெளியீடு
/
சென்னையில் மின்சார பஸ்கள் இயக்கம்...45 வழித்தடங்கள் :புறநகரையும் சேர்த்து பட்டியல் வெளியீடு
சென்னையில் மின்சார பஸ்கள் இயக்கம்...45 வழித்தடங்கள் :புறநகரையும் சேர்த்து பட்டியல் வெளியீடு
சென்னையில் மின்சார பஸ்கள் இயக்கம்...45 வழித்தடங்கள் :புறநகரையும் சேர்த்து பட்டியல் வெளியீடு
UPDATED : ஜூன் 28, 2025 11:51 AM
ADDED : ஜூன் 28, 2025 03:46 AM

சென்னை:சென்னையில் முதன் முறையான மின்சார பேருந்துகளின் சேவையை, முதல்வர் ஸ்டாலின், நாளை மறுநாள் துவக்கி வைக்க உள்ள நிலையில், அவை இயக்கப்படும் 45 வழித்தடங்கள் குறித்த பட்டியலை, மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளத. அதேசமயம், மாநகர பேருந்துகளில் தற்போது வசூலிக்கப்படும் கட்டணமே, மின்சார பேருந்துகளிலும் வசூலிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையின் எல்லை நாளுக்குள் நாள் விரிவடைந்து வருகிறது. இதனால், பொது போக்குவரத்து சேவையை அதிகப்படுத்த வேண்டியதாகிறது. அந்த வகையில், பயணியர் வசதிக்காக கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையமும் திறக்கப்பட்டு, ஏற்கனவே உள்ள, 3,454 பேருந்துகளுடன் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
அதனால், தனியார் பங்களிப்போடு சென்னையில், 1,000 மின்சார தாழ்தள பேருந்துகளை இயக்க, மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்தது.
முதற்கட்டமாக, 625 மின்சார பேருந்துகளை இயக்க, 'அசோக் லேலண்ட்' நிறுவனத்தின் துணை நிறுவனமான, 'ஓ.எச்.எம்., குளோபல் மொபிலிடி பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில், 225 'ஏசி' பேருந்துகள், 400 'ஏசி' இல்லாத பேருந்துகள்.
இந்த வகை பேருந்துகளின் மின்சார தேவைக்காக, வியாசர்பாடி, பெரும்பாக்கம், தண்டையார்பேட்டை, பல்லவன் இல்லம், பூந்தமல்லி ஆகிய பணிமனைகளில் 100.69 கோடி ரூபாயில் 'சார்ஜிங்' மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
முதற்கட்டமாக 120 மின்சார பேருந்துகள், வழித்தடங்களில் இயக்கும் வகையில் தயார் நிலையில் உள்ளன. இந்த புதிய பேருந்துகளை, முதல்வர் ஸ்டாலின், வரும் 30ம் தேதி துவங்கி வைக்க உள்ளார்.
சென்னை, புறநகருக்கும் சேர்த்து மின்சார பேருந்துகளை இயக்க, 45 வழித்தடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில், 10க்கும் மேற்பட்ட வழித்தடங்களில், மின்சார பேருந்து சேவை முதலில் இயக்கப்படுகிறது.
இதுகுறித்து, மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:
முதற்கட்டமாக 120 மின்சார பேருந்துகள் இயக்க உள்ளோம். இதற்கான சோதனை ஓட்டமும் முடிந்துள்ளது. தற்போதுள்ள மாநகர சொகுசு, 'ஏசி' பேருந்துகளில் பயணிப்பது போல், இதிலும் பயணிக்கலாம். இதற்காக, எந்தவித கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படாது; வழக்கமான கட்டணமே வசூலிக்கப்படும்.
ஏற்கனவே உள்ள வழித்தடங்களில், பெரும்பாலான மின்சார பேருந்துகள் இயக்கப்படும். தேவையை பொறுத்து, புதிய வழித்தடங்களில் இயக்கவும் ஆய்வு செய்யப்படும். அடுத்த ஆண்டு இறுதிக்குள் 1,000 மின்சார பேருந்துகளும் பயன்பாட்டிற்குள் கொண்டு வரப்படும்.
ஒப்பந்ததாரருக்கு கி.மீ., ஒன்றுக்கு 'ஏசி' வசதி இல்லாத மின்சார பேருந்துகளுக்கு 77.16 ரூபாய், 'ஏசி' பேருந்துகளுக்கு 80.86 ரூபாய் வழங்க, மாநகர போக்குவரத்துக் கழகம் நிர்ணயம் செய்துள்ளது.
மின்சார பேருந்துகளால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிர்வாகத்துக்கு டீசல் செலவும் குறையும். மின்சார பேருந்துகள் ஒரு முறை சார்ஜிங் செய்தால் 180 கி.மீ., வரை இயக்க இயலும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.