ADDED : பிப் 19, 2026 06:47 AM
மின் வாரிய பிரிவு அலுவலகம் மேட்டுக்குப்பத்தில் துவக்கம்
சென்னை: அடையாறு மின் பகிர்மான வட்டத்தின் கீழ், துரைப்பாக்கம் பிரிவு அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் இருந்து, மேட்டுக்குப்பம் எனும் புதிய பிரிவு அலுவலகம் இன்று முதல் பிரிக்கப்படுகிறது.
இது, எண்: 195 சென்னை மாநகராட்சி கட்டடம் ராஜிவ்காந்தி சாலை, மேட்டுக்குப்பம், சென்னை - 97 என்ற முகவரியில் இயங்கும். இந்த அலுவலகத்தை தலைமை செயலக குடியிருப்பு, ஹரிஹந்த் குடியிருப்பு, குமரன் குடில், பார்த்தசாரதி நகர், தேவராஜ் நகர், மேட்டுக்குப்பம் மற்றும் அவற்றை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்தோர், மின்சாரம் தொடர்பான கோரிக்கைகளுக்கு அணுகுமாறு மின் வாரியம் தெரிவித்துள்ளது.
ரூ.1.84 கோடியில் திட்ட பணிகள் துவக்கம்
மடிப்பாக்கம்: பெருங்குடி மாநகராட்சி அலுவலக வளாகத்தில், கவுன்சிலர் நிதி 1 கோடி ரூபாய் மதிப்பில், 1,200 சதுர அடி பரப்பளவு உள்ள பல்நோக்கு கட்டடம் அமைக்கப்பட உள்ளது.
தவிர, 188 வார்டுக்கு உட்பட்ட, மடிப்பாக்கம் பேருந்து நிலையத்தை ஒட்டியுள்ள 16 தெருக்களும், ராமமூர்த்தி நகர் பிரதான சாலை மற்றும் அதனை ஒட்டியுள்ள சாலைகளும் சீரமைக்கும் பணி, மாநகராட்சியின் மூலதன நிதி 84 லட்சம் ரூபாய் மதிப்பில் துவங்கப்பட்டுள்ளன. இப்பணிகளை, சோழிங்கநல்லுார் தி.மு.க., - எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ் நேற்று முன்தினம் துவக்கி வைத்தார்.
தரமணியில் இன்று மின் குறைதீர் கூட்டம்
சென்னை: தரமணி சி.எஸ்.ஐ.ஆர்., சாலையில் உள்ள ஐ.டி., காரிடார் செயற்பொறியாளர் அலுவலகத்தில், இன்று காலை 10:30 மணிக்கு, மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கிறது.
இதில், தரமணி, பெருங்குடி மற்றும் அவற்றை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் பங்கேற்று, மின்சாரம் தொடர்பான குறைகளை மின் வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்து பயன்பெறலாம்.

