/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிறுசேரி - படூரில் மீட்கப்பட்ட ஆக்கிரமிப்பு நிலம்... ரூ.1,075 கோடி! சாலை விரிவாக்கத்திற்காக நடவடிக்கை
/
சிறுசேரி - படூரில் மீட்கப்பட்ட ஆக்கிரமிப்பு நிலம்... ரூ.1,075 கோடி! சாலை விரிவாக்கத்திற்காக நடவடிக்கை
சிறுசேரி - படூரில் மீட்கப்பட்ட ஆக்கிரமிப்பு நிலம்... ரூ.1,075 கோடி! சாலை விரிவாக்கத்திற்காக நடவடிக்கை
சிறுசேரி - படூரில் மீட்கப்பட்ட ஆக்கிரமிப்பு நிலம்... ரூ.1,075 கோடி! சாலை விரிவாக்கத்திற்காக நடவடிக்கை
ADDED : மார் 14, 2024 12:16 AM

செங்கல்பட்டு, போக்குவரத்து நெரிசல் மிகுந்த பழைய மாமல்லபுரம் சாலையான ஓ.எம்.ஆரில், சிறுசேரி முதல் படூர் வரை விரிவாக்கம் செய்வதற்காக பணிகளில் மாநில நெடுஞ்சாலைத் துறை மும்முரமாக ஈடுபட்டுள்ளது. அதற்காக, ஆக்கிரமிப்பில் இருந்த 1,075 கோடி ரூபாய் மதிப்புடைய 25 ஏக்கர் நிலத்தை, அத்துறையினர் அதிரடியாக மீட்டுள்ளனர்.
சென்னை, அடையாறு மத்திய கைலாஷ் -- மாமல்லபுரம் பூஞ்சேரி வரை, 42 கி.மீ., பழைய மாமல்லபுரம் சாலை உள்ளது.
இத்தடத்தில், சென்னையை ஒட்டிய திருப்போரூர், சிறுசேரி, கேளம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் அசுர வளர்ச்சி அடைந்து வருகின்றன.
தனியார் நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் அதிகரிப்பதால், அப்பகுதிகளில் போக்குவரத்துக்கான வசதிகளை எளிமைபடுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
தற்போது இச்சாலையில், தனியார் நிறுவன பேருந்துகள், டாரஸ் லாரிகள் உட்பட, தினம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
இதனால், சிறுசேரி -- படூர் வரை, கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதனால், இவ்வழியாக செல்லும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், அத்தியாவசிய பணிக்கு செல்வோர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
அதனால், நெரிசல் ஏற்படுவதை தடுக்கவும், எளிதான வாகன போக்குவரத்திற்காகவும், சிறுசேரி முதல்- படூர் வரை உள்ள நான்கு வழிச்சாலையை, ஆறுவழியாக மேம்படுத்த, நெடுஞ்சாலைத் துறை முடிவு செய்தது.
அதற்காக, 2011ம் ஆண்டு, வருவாய் துறை வாயிலாக நில எடுப்பு நடத்தப்பட்டது. கையகப்படுத்தப்பட்ட நில உரிமையாளர்களுக்கு, அரசு இழப்பீட்டு தொகை வழங்கியது.
சாலை விரிவாக்க திட்ட பணிகளில் தாமதம் ஏற்பட்டதால், விரிவாக்கத்திற்காக ஒப்படைத்த நிலங்களில் ஆக்கிரமிப்புகள் துவங்கின. அந்த இடத்தில் வீடுகள், கடைகள் என பல கட்டடங்கள் கட்டப்பட்டன.
இதையடுத்து, இந்த கட்டடங்களை இடித்து, நிலத்தை ஒப்படைக்கும்படி, ஆக்கிரமிப்பாளர்களுக்கு நெடுஞ்சாலைத் துறை எச்சரிக்கை 'நோட்டீஸ்' வழங்கினர். ஆனால், ஆக்கிரமிப்பாளர்கள் அதை கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், செங்கல்பட்டு நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளர் செல்வக்குமார் தலைமையில், உதவி கோட்ட பொறியாளர் லெனின், உதவி பொறியாளர் அரவிந்த் உள்ளிட்ட துறை ஊழியர்கள், ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் நான்கு மாதங்களாக தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.
திருப்போரூர் பேரூராட்சி காலவாக்கத்தில் ஆக்கிரமித்து கட்டிய வீடுகளை, நெடுஞ்சாலைத் துறையினர், நேற்று முன்தினம் இடித்து அகற்றினர்.
இதனுடன் சேர்த்து, சிறுசேரி -- படூர் மற்றும் ஆலத்துார் உள்ளிட்ட பகுதிகளில், நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான ஆக்கிரமிப்பில் இருந்த, 24.17 ஏக்கர் நிலத்தை மீட்டுள்ளனர். இவற்றின் மதிப்பு 1,075 கோடி ரூபாய் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
திட்ட மதிப்பீடு
சிறுசேரி - படூர் வரையிலான ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. நான்கு வழிச்சாலையை ஆறு வழியாக மேம்படுத்த, நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. இச்சாலை அமைக்க, திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. உரிய நிதி கேட்டு, விரைவில் அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்படும். அதன்படி, சாலை அமைப்பதற்கான பணிகள் துவங்கும்.
- நெடுஞ்சாலை துறை அதிகாரிகள்,
செங்கல்பட்டு.

