/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பை சகிக்க முடியாது ஐகோர்ட் கண்டிப்பு நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளுக்கு 'குட்டு'
/
நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பை சகிக்க முடியாது ஐகோர்ட் கண்டிப்பு நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளுக்கு 'குட்டு'
நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பை சகிக்க முடியாது ஐகோர்ட் கண்டிப்பு நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளுக்கு 'குட்டு'
நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பை சகிக்க முடியாது ஐகோர்ட் கண்டிப்பு நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளுக்கு 'குட்டு'
ADDED : ஜூன் 11, 2025 11:40 PM

சென்னை :'நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில், அதிகாரிகள் முறையாக செயல்படுவதில்லை என்பது, நீதிமன்றத்தின் கவனத்துக்கு வந்துள்ளது. அதிகாரிகளின் இந்த செயலற்ற தன்மையை, ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது' என, சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தைச் சேர்ந்தவர் செல்வி. இவர், அதே பகுதி சத்யா ஸ்டுடியோ அருகில், நீர்நிலை புறம்போக்கு என வகைப்படுத்தப்பட்ட நிலத்தில் வீடு கட்டி வசித்து வந்தார்.
இதுகுறித்து அறிந்த மயிலாப்பூர் தாசில்தார், வீட்டை காலி செய்யும்படி செல்விக்கு, கடந்த மார்ச் 3ல் 'நோட்டீஸ்' அனுப்பினார். இந்த நோட்டீசை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், செல்வி தாக்கல் செய்த மனு:
கடந்த 2015ல், நானும், கணவரும் வழக்கு தொடர்ந்தோம். தாசில்தார் அனுப்பிய நோட்டீசை ரத்து செய்து, தங்களுக்கு பட்டா வழங்கும்படியும் கோரியிருந்தோம்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், தங்கள் மனுவை முடித்து வைத்தது. நோட்டீசுக்கு உரிய விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டது.
கடந்த 2022ல், நீர்நிலையில் குடியிருப்பதாகக்கூறி, எங்களின் பட்டா கோரிக்கை தாசில்தாரால் நிராகரிக்கப்பட்டது. மாவட்ட கலெக்டரிடம் அளித்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது.
இந்த உத்தரவை எதிர்த்த வழக்கையும், 'டிவிஷன் பெஞ்ச்' தள்ளுபடி செய்தது. எங்களுக்கு தாசில்தார் அளித்த நோட்டீசை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை, நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வு விசாரித்தது.
தமிழக அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, ''ஆக்கிரமிப்பாளரான மனுதாரருக்கு, மாற்று இடத்தில் வீடு வழங்க தயாராக இருக்கிறோம். அதற்கு, குடும்ப உறுப்பினர்களின், 'பயோ மெட்ரிக்' பதிவுகளை வழங்கி, தற்போது குடியிருக்கும் இடத்தை காலி செய்தால், உடனே புதிய வீட்டுக்கான சாவி ஒப்படைக்கப்படும்,'' என்றார்.
இதை பதிவு செய்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
நீர் நிலைகளை ஆக்கிரமித்து, அங்கு வசிப்பதை அங்கீகரிக்க முடியாது. எனவே, மனுதாரரை சம்பந்தப்பட்ட இடத்தில் இருந்து காலி செய்ய வேண்டும்.
அங்கு, எதிர்காலத்தில் வேறு எந்த ஆக்கிரமிப்பும் இல்லாமல் இருப்பதை, அரசு உறுதி செய்ய வேண்டும்.
நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அதிகாரிகள் முறையாக செயல்படுவதில்லை என்பது, நீதிமன்றத்தின் கவனத்திற்கு வந்துள்ளது.
அதிகாரிகளின் இந்த செயலற்ற தன்மையை, ஒரு போதும் பொறுத்துக்கொள்ள முடியாது. மனுதாரரான செல்வியின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.