/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரத்து செய்த 50 ரயில்களை மீண்டும் இயக்காததால்... தீராத நெரிசல்!: புதிய கால அட்டவணையில் இணைக்க வலியுறுத்தல்
/
ரத்து செய்த 50 ரயில்களை மீண்டும் இயக்காததால்... தீராத நெரிசல்!: புதிய கால அட்டவணையில் இணைக்க வலியுறுத்தல்
ரத்து செய்த 50 ரயில்களை மீண்டும் இயக்காததால்... தீராத நெரிசல்!: புதிய கால அட்டவணையில் இணைக்க வலியுறுத்தல்
ரத்து செய்த 50 ரயில்களை மீண்டும் இயக்காததால்... தீராத நெரிசல்!: புதிய கால அட்டவணையில் இணைக்க வலியுறுத்தல்
UPDATED : டிச 19, 2025 05:44 AM
ADDED : டிச 19, 2025 05:04 AM

சென்னை: பராமரிப்பு பணி என்ற பெயரில், ஓராண்டுக்கு முன் ரத்து செய்யப்பட்ட, 50 புறநகர் மின்சார ரயில்கள் மீண்டும் இயக்கப்படாததால், சென்னையில் புறநகர் மின்சார ரயில்களில், பயணியர் கூட்டம் நிரம்பி வழிகிறது. பயணியர் விபத்தில் சிக்கும் சூழல் நிலவுவதால், ரத்தான ரயில்களின் சேவையை மீண்டும் துவக்கும் வகையில், அடுத்த மாதம் முதல் வாரம் வெளியாக உள்ள ரயில்வே புதிய கால அட்டவணையில் இணைக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை ரயில்வே கோட்டத்தில், சென்னை சென்ட்ரல் -- அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, சென்னை கடற்கரை -- செங்கல்பட்டு வழித்தடங்களில், தினமும் 600 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. இவற்றில், தினமும் ஒன்பது லட்சம் பேர் பயணம் செய்து வருகின்றனர்.
ரயில் பாதை பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள் நடக்க உள்ளதாக கூறி, கடந்த ஆண்டில் சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, அரக்கோணம் தடத்தில், 50 மின்சார ரயில்களும், மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனால், வழக்கமாகச் செல்லும் ரயில்களில், காலை மற்றும் மாலை நேரங்களில் பயணியர் கூட்டம் அலைமோதுகிறது. கூட்ட நெரிசலில் பயணியர் சிக்கி அவதிப்படுகின்றனர்.
ஆபத்தான நிலையில், மின்சார ரயில்களின் படிகளில் தொங்கியபடி பயணம் செய்து வருகின்றனர். எனவே, நிறுத்தப்பட்ட மின்சார ரயில்களை மீண்டும் இயக்க வேண்டுமென, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பராமரிப்பு பணி
இதுகுறித்து, திருநின்றவூர் ரயில் பயணியர் பொதுநலச் சங்க செயலர் முருகையன் கூறியதாவது:
சென்னை புறநகரில் மின்சார ரயில்களின் தேவை, பல மடங்கு அதிகரித்து வருகிறது.
போதிய மின்சார ரயில்கள் இல்லாததால், அலுவலக நேரங்களில் பயணியர் நெரிசலில் சிக்கி பயணம் செய்து வருகின்றனர். பராமரிப்பு பணியை காரணம் காட்டி, 50க்கும் மேற்பட்ட மின்சார ரயில்களின் சேவை, கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது.
இன்னும் இந்த ரயில்களின் சேவை துவங்கப்படவில்லை. இந்த ரயில்களின் சேவையை மீண்டும் துவங்க வேண்டும். இதற்கான அறிவிப்பை, வரும் புதிய கால அட்டவணையில் சேர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அடிப்படை வசதி
இதுகுறித்து, சென்னை கோட்ட ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
கூடுதல் மின்சார ரயில்கள் இயக்கம், ரயில் சேவை நீட்டிப்பு, ரயில் நிலையங்களில் அடிப்படை வசதி மேம்படுத்துவது குறித்து, பயணியர் தொடர்ந்து கோரிக்கை மனு அளித்து வருகின்றனர்.
மேலும், ரத்து செய்யப்பட்ட மின்சார ரயில்கள் மீண்டும் இயக்குவது குறித்து, நிர்வாகம் பரிசீலனை செய்து வருகிறது. அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியாக உள்ள புதிய கால அட்டவணையில், இதற்கான அறிவிப்புகள் இடம்பெறும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

