/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மெட்ரோ ரயில் நிலையங்களில் விரிவுபடுத்தப்படும் வசதிகள்
/
மெட்ரோ ரயில் நிலையங்களில் விரிவுபடுத்தப்படும் வசதிகள்
மெட்ரோ ரயில் நிலையங்களில் விரிவுபடுத்தப்படும் வசதிகள்
மெட்ரோ ரயில் நிலையங்களில் விரிவுபடுத்தப்படும் வசதிகள்
ADDED : ஜன 08, 2024 01:12 AM
சென்னை:மெட்ரோ ரயில் நிலையங்களில் வசதிகள் அதிகப்படுத்த மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது.
இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
மெட்ரோ ரயில்களில் பயணியர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப, கூடுதல் நகரும் படிக்கட்டுகள், மின்துாக்கிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
பயணியர் வருகை அதிகமாக உள்ள எழும்பூர், திருமங்கலம், அண்ணா நகர், ஆலந்துார், கோயம்பேடு, டி.எம்.எஸ்., ஆயிரம்விளக்கு உள்ளிட்ட 10 மெட்ரோ ரயில் நிலையங்களில், 40 நகரும் படிக்கட்டுகள், 10 மின்துாக்கிகள் அமைக்கப்பட உள்ளன.
அடுத்த எட்டு மாதங்களில் இந்த பணிகள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.
மெட்ரோ ரயில் நிலைங்களில் இருந்து குடியிருப்புகள், தனியார் அலுவலகங்கள், பேருந்து நிலையங்களுக்கு செல்லும் வகையில், ஐந்து - எட்டு பேர் பயணிக்கும் வகையிலான பேட்டரி வாகனங்களை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவர, தனியார் ஒப்பந்ததாரர்களை தேர்வு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அதேபோல், மாதவரம்-- சிறுசேரி சிப்காட் வரையிலான மூன்றாவது மெட்ரோ வழித்தடத்தில், பசுமை வழிச்சாலை முக்கிய பகுதியாக இருக்கிறது. இங்கு சுரங்கம் தோண்டும் பணியில் நான்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
பசுமை வழிச்சாலையில் இருந்து அடையாறு சந்திப்பு மற்றும் பசுமை வழிச்சாலையில் இருந்து மந்தைவெளி நோக்கி இரு சுரங்கப்பாதைகள் அமைக்க, தலா இரண்டு சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
பசுமை வழிச்சாலையில் இருந்து அடையாறு சந்திப்பு நோக்கி சுரங்கப்பாதை அமைக்கும் பணி, தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.
தவிர, பசுமை வழிச்சாலையில் இருந்து மந்தைவெளி நோக்கி சுரங்கம் தோண்டும் பணி கடந்த அக்., மாதத்தில் துவங்கியது. 17 மீட்டர் ஆழத்தில் சுரங்கம் தோண்டும் பணி நடைபெறுகிறது. 750 மீட்டர் தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்க வேண்டும்.
தற்போது வரை, 200 மீட்டர் வரை சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரம் அடுத்த மூன்று மாதத்தில் பணியை முடித்து, மந்தைவெளியில் வெளியேறும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.