/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
உள்ளாட்சிகளின் ஜனநாயக அதிகாரம் பறிப்பு தொழிற்சாலை அனுமதி இனி கலெக்டருக்கு!
/
உள்ளாட்சிகளின் ஜனநாயக அதிகாரம் பறிப்பு தொழிற்சாலை அனுமதி இனி கலெக்டருக்கு!
உள்ளாட்சிகளின் ஜனநாயக அதிகாரம் பறிப்பு தொழிற்சாலை அனுமதி இனி கலெக்டருக்கு!
உள்ளாட்சிகளின் ஜனநாயக அதிகாரம் பறிப்பு தொழிற்சாலை அனுமதி இனி கலெக்டருக்கு!
ADDED : டிச 22, 2024 12:28 AM

காஞ்சிபுரம், புதிதாக துவங்கும் தனியார் தொழிற்சாலைகளுக்கு, உள்ளாட்சி பிரதிநிதிகள் வாயிலாக அனுமதி அளிக்கப்பட்டு வந்த நிலையில், ஜனநாயக ரீதியாக வழங்கப்பட்டு வந்த அந்த அதிகாரம், தற்போது கலெக்டருக்கு மாற்றப்பட்டு உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து வட்டார வளர்ச்சி அலுவலகங்களின் கட்டுப்பாட்டில், 274 ஊராட்சிகள் உள்ளன.
இதில், இருங்காட்டுக்கோட்டை, ஸ்ரீபெரும்புதுார், ஒரடகம் என, அழைக்கப்படும் சென்னகுப்பம், பிள்ளைப்பாக்கம், வல்லம், வடகால் உள்ளிட்ட ஏழு சிப்காட் தொழிற்பூங்காக்கள் செயல்படுகின்றன.
இந்த தொழில் பூங்காக்களில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் ஏராளமாக இயங்கி வருகின்றன. தவிர, தொழிற்சாலைகள் விரிவுபடுத்தும் பணிகளும் நடந்து வருகின்றன.
தொழிற்சாலை துவக்கம் மற்றும் விரிவாக்க பணிக்கு, அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் செயல்படும் ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றிய பின், தொழிற்சாலைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த நவம்பரில் அரசு திருத்திய புதிய அரசாணை ஒன்று வெளியிட்டுள்ளது.
இதில், ஊராட்சிகளில் தனியார் தொழிற்சாலைகள் துவங்குவதற்கு, இனி ஊராட்சி மற்றும் ஒன்றியக்குழு கூட்டத்தின் தீர்மானம் பெறத்தேவையில்லை.
அதற்கு பதிலாக, மாவட்ட கலெக்டர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டு உள்ளது. இதில், சுகாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் முறையாக கண்காணித்த பின்பே, தொழிற்சாலை துவங்க அனுமதி அளிக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஜனநாயக ரீதியாக உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டு வந்தது அந்த அதிகாரம், கலெக்டருக்கு மாற்றப்பட்டுள்ளதால், அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, உள்ளாட்சி பிரதிநிதிகள் கூறியதாவது:
தனியார் தொழிற்சாலைகள் துவங்குவதற்கு முன், அந்தந்த ஊராட்சிகள் மற்றும் ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம் வைத்து கொடுத்து வந்தோம்.
கிராம மக்களுக்கு நன்மை தீமைகள் என, ஆராய்ந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு, இது ஒரு அங்கீகரமாக இருந்தது.
தற்போதைய அரசாணையால், உள்ளாட்சி பிரதிநிதிகளின் அதிகாரம் முழுமையாக பறிக்கப்பட்டு உள்ளது. இதை அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
எளிமையாகும்
புதிய தொழிற்சாலைகள் துவங்குவது மற்றும் விரிவுபடுத்தும் அனுமதிக்கு, 'ஆன்லைன்' வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் என, புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆகையால், அந்தந்த மாவட்ட நிர்வாகத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இது, தொழிற்சாலைகள் துவங்கும் அனுமதிக்கு எளிமையாகும்.
- கலைச்செல்வி, கலெக்டர், காஞ்சிபுரம்.