போலி குங்குமம் பறிமுதல் ரேஷன் அரிசியில் பித்தலாட்டம்
போலி குங்குமம் பறிமுதல் ரேஷன் அரிசியில் பித்தலாட்டம்
ADDED : மார் 09, 2024 12:19 AM

கொருக்குப்பேட்டை, கொருக்குப்பேட்டையில், ரேஷன் அரிசி வாங்கி, போலி குங்குமம், கோல மாவு தயாரிக்கப்படுவதாக குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு, நேற்று தகவல் கிடைத்தது.
இதையடுத்து, குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை சென்னை வடக்கு மண்டல இன்ஸ்பெக்டர் ஹேமலதா தலைமையிலான போலீசார், கொருக்குப்பேட்டை, கருமாரியம்மன் நகர், 6வது தெருவில் உள்ள குறிப்பிட்ட கடையில் சோதனை செய்தனர். அங்கு 44 மூட்டைகளில், 1,100 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
மேலும், ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, அதில் சிவப்பு வண்ணத்தை சேர்த்து, குங்குமம் மற்றும் கோல மாவு தயாரித்து, அதிக விலைக்கு விற்றது தெரியவந்தது.
சம்பவத்தில் ஈடுபட்ட தண்டையார்பேட்டையை சேர்ந்த கார்த்திக், 33, என்பவரை போலீசார் கைது செய்து, அங்கிருந்த ரேஷன் அரிசி பறிமுதல் செய்தனர்.
