ADDED : அக் 19, 2024 02:01 AM

திருவொற்றியூர்: திருவொற்றியூர், காலடிப்பேட்டையை சேர்ந்தவர் அருள்,47; டெய்லர். இவரது மனைவி, அம்சா,42; இவர்களது மகள் ரம்யா,19; பி.எஸ்சி., 2ம் ஆண்டு படித்து வந்தார். மகன் ராஜேஷ்,14; 9ம் வகுப்பு படித்து வந்தார். முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட அம்சா சிகிச்சை பலனின்றி கடந்த 3ம் தேதி இறந்தார்.
மனைவி இல்லாமல், பிள்ளைகளை எப்படி வளர்க்க போகிறேன் என, அருள் புலம்பியபடி இருந்தார். நேற்று மதியம், 2:30 மணிக்கு, அருளின் தாய் துளசி, மகன், பேரப்பிள்ளைகளை பார்க்க வந்தபோது, கதவு பூட்டியிருந்தது.
கதவை உடைத்து பார்த்தபோது, அருள், துாக்கிலும், மகள் ரம்யா, மகன் ராஜேஷ் ஆகியோர் கட்டிலில் இறந்து கிடந்தனர். தகவலறிந்த திருவொற்றியூர் போலீசார், மூவரின் உடலையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில், மனைவி இறந்த துக்கத்தில், தன் மகன், மகளை கழுத்தை நெரித்து கொலை செய்து, அருள் துாக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டது தெரிய வந்துள்ளது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.