/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'போதை' கார் ஓட்டுநரால் கோர விபத்து தந்தை, கர்ப்பணி மகள் பலி; இருவர் படுகாயம்
/
'போதை' கார் ஓட்டுநரால் கோர விபத்து தந்தை, கர்ப்பணி மகள் பலி; இருவர் படுகாயம்
'போதை' கார் ஓட்டுநரால் கோர விபத்து தந்தை, கர்ப்பணி மகள் பலி; இருவர் படுகாயம்
'போதை' கார் ஓட்டுநரால் கோர விபத்து தந்தை, கர்ப்பணி மகள் பலி; இருவர் படுகாயம்
ADDED : ஜூன் 25, 2025 12:13 AM

அனகாபுத்துார், அனகாபுத்துாரில், போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய ஓட்டுநரால், தந்தை மற்றும் கர்ப்பிணி மகள் பரிதாபமாக உயிரிழந்தனர். தாயும், மற்றொரு கார் ஓட்டுநரும் படுகாயமடைந்தனர்.
சேலையூர் அடுத்த வேங்கைவாசல், மகாராஜபுரம் முதல் குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் பத்மநாபன், 58. இவரது மனைவி இந்துராணி, 51. இவர்களது மகள் தீபிகா, 23; எட்டு மாத கர்ப்பிணி. தீபிகாவின் கணவர் ரித்தீஷ். கொடுங்கையூரில் வசித்து வருகிறார்.
அடுத்த மாதம், தீபிகாவிற்கு வளைகாப்பு நடக்க இருந்தது. இதற்காக தாய் வீட்டிற்கு வந்திருந்தார். இந்த நிலையில், அம்பத்துாரில் நடந்த உறவினர் குழந்தையின் பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு, நேற்று முன்தினம் பத்மநாபன், இந்துராணி, தீபிகா ஆகிய மூன்று பேரும் சென்றனர்.
அங்கிருந்து, இரவு 10:00 மணிக்கு, 'மாருதி ஸ்விப்ட்' காரில், சென்னை புறவழிச்சாலை வழியாக தாம்பரம் நோக்கி வந்தனர். காரை கால்டாக்கி ஓட்டுநரான அம்பத்துாரைச் சேர்ந்த புவனேஷ், 21, என்பவர் ஓட்டினார்.
அனகாபுத்துார், சீனிவாசபுரம் அருகே வந்தபோது, எதிர்திசையில் சென்ற 'மஹிந்திரா சைலோ' கார், தாறுமாறாக வந்து இந்த கார் மீது வேகமாக மோதியது.
இதில், 'ஸ்விப்ட்' காரில் பயணித்த பத்மநாபன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற மூவரும் படுகாயமடைந்தனர்.
போலீசார் விரைந்து, படுகாயமடைந்த தீபிகாவை மீட்டு வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மற்ற இருவரையும், குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், பத்மநாபனின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இந்த நிலையில், தனியார் மருத்துவமனையில், மருத்துவர்களின் பரிசோதனையில் தீபிகாவும் உயிரிழந்தது தெரியவந்தது. பத்மநாபனின் மனைவி இந்துராணி, மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீசாரின் விசாரணையில், விபத்து ஏற்படுத்தியது கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன், 27, என்பதும், போதையில் கார் ஓட்டியதும் தெரிய வந்தது.
இதையடுத்து, குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, மணிகண்டனை கைது செய்தனர்; கார் பறிமுதல் செய்யப்பட்டது.