ADDED : ஏப் 13, 2026 04:42 AM
ஆதம்பாக்கம்: முறைத்ததை தட்டிக்கேட்ட சகோதரர்களை தாக்கிய வழக்கில், தந்தை - மகனை போலீசார் கைது செய்தனர்.
ஆதம்பாக்கம், அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் தனுஷ், 22; ஆட்டோ ஓட்டுநர். அவரது சகோதரர் தர்மா, 23, என்பவர், கடந்த 9ம் தேதி இரவு டீக்கடையில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது, அவ்வழியாக வந்த ஆதம்பாக்கம், பரமேஸ்வரன் நகரை சேர்ந்த ராகுல் என்பவர், தர்மாவை முறைத்தபடி சென்றதாக கூறப்படுகிறது.
இதை, தம்பியிடம் தர்மா கூறியுள்ளார். இது குறித்து கேட்க, இருவரும் ராகுல் வீட்டிற்கு சென்றனர். அவர்களை வழிமறித்த ராகுலின் உறவினர் உள்ளிட்ட நால்வர், தர்மா, தனுஷ் ஆகிய இருவரையும் தகாத வார்த்தைகளால் பேசி, கற்களால் கடுமையாக தாக்கினர்.
பலத்த காயமடைந்த இருவரும், மருத்துவ சிகிச்சை பெற்றனர். இது குறித்த புகாரின்படி, ஆதம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து, சம்பவத்தில் ஈடுபட்ட ஆதம்பாக்கம், பரமேஸ்வரன் நகரை சேர்ந்த குட்டி, 41, அவரது மகன் ஆகாஷ், 21, ஆகியோரை கைது செய்தனர்.
இருவரிடமும் விசாரணை நடத்திய போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள மற்றவர்களை தேடி வருகின்றனர்.
