ADDED : மார் 09, 2026 05:33 AM
புளியந்தோப்பு: தனது வீட்டில் வசிப்போருக்கு தொல்லை கொடுத்ததை தட்டிக்கேட்ட போலீஸ்காரரை, இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கிய, தந்தை - மகனை, போலீசார் கைது செய்தனர்.
பழைய வண்ணாரப்பேட்டை, பரசுராம் தெருவைச் சேர்ந்தவர் கரிமுல்லா, 55. வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் ஏட்டுவாக உள்ளார். இவருக்கு, புளியந்தோப்பு, சாஸ்திரி நகர், 13வது தெருவில் சொந்த வீடு உள்ளது. அதை, ராஜேஷ் கண்ணா, முத்து ஆகியோருக்கு வாடகைக்கு விட்டுள்ளார்.
இந்த வீட்டின் அருகே காஞ்சனா, 66, என்பவர் வசித்து வருகிறார். இவர், அம்பத்துாரில், கடந்த 2023ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட 'கருக்கா' சுரேஷின் மனைவி.
காஞ்சனா, தங்களுக்கு அடிக்கடி தொல்லை கொடுப்பதாக, ராஜேஷ் கண்ணா மற்றும் முத்து ஆகியோர், கரிமுல்லாவுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அதன்படி, நேற்று முன்தினம் அங்கு வந்த கரிமுல்லா, காஞ்சனாவிடம் முறையிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காஞ்சனாவின் மகன் ரகு, 45, மற்றும் பேரன் பரத், 20, ஆகியோர், கரிமுல்லாவை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த கரிமுல்லா, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மருத்துவமனை அளித்த தகவலின்படி, புளியந்தோப்பு போலீசார் வழக்கு பதிந்து, அதே பகுதியைச் சேர்ந்த ரகு, பரத் ஆகிய இருவரையும் கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள காஞ்சனாவை தேடுகின்றனர்.
