/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரசாயத்தால் பழுக்க வைத்த மாம்பழ விற்பனை அதிகரிப்பு; ஆய்வு நடத்தாமல் உணவு பாதுகாப்பு துறையினர் மவுனம்
/
ரசாயத்தால் பழுக்க வைத்த மாம்பழ விற்பனை அதிகரிப்பு; ஆய்வு நடத்தாமல் உணவு பாதுகாப்பு துறையினர் மவுனம்
ரசாயத்தால் பழுக்க வைத்த மாம்பழ விற்பனை அதிகரிப்பு; ஆய்வு நடத்தாமல் உணவு பாதுகாப்பு துறையினர் மவுனம்
ரசாயத்தால் பழுக்க வைத்த மாம்பழ விற்பனை அதிகரிப்பு; ஆய்வு நடத்தாமல் உணவு பாதுகாப்பு துறையினர் மவுனம்
UPDATED : ஏப் 25, 2025 12:14 AM
ADDED : ஏப் 24, 2025 11:25 PM

சென்னையில் சுவையில்லாத ரசாயன மாம்பழங்கள் விற்பனை அதிகரித்துள்ள நிலையில், அதை ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுக்க, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தயங்குகின்றனர். தர்பூசணி பழங்கள் விவகாரம், கெட்டுப்போன உணவு தந்த ஹோட்டல் மீது நடவடிக்கை எடுக்க முயன்ற உணவு பாதுகாப்பு துறை முன்னாள் அதிகாரி சதீஷ்குமார் மாற்றப்பட்டு, பணியிடம் ஒதுக்காமல் உள்ளதே அதிகாரிகள் தயக்கத்திற்கு காரணம். அதனால், ரசாயனம் பயன்படுத்த பழுக்க வைத்த மாம்பழங்கள், தரமற்ற குளிர்பானங்களை சாப்பிடுவோர், உடல்நிலை பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கோடை காலமான ஜூன், ஜூலை மாதங்களில், சென்னை கோயம்பேடுக்கு மாம்பழ வரத்து அதிகமாக இருக்கும். அல்போன்சா, இமாம்பசந்த், பங்கனப்பள்ளி, நீலம் உள்ளிட்ட மாம்பழங்கள், தற்போது விற்பனைக்கு வரத்துவங்கி உள்ளன.
சில்லரை மற்றும் மொத்த விற்பனை கடைகளில் விற்பனைக்கு வரும் இவ்வகை மாம்பழங்களின் வெளிப்புற நிறம் மட்டுமே மஞ்சளாக உள்ளது.
உள்ளே வெள்ளை சதை பற்றுடன் இனிப்பு சுவை மிகக் குறைவாக உள்ளது; விலையும் கூடுதலாக உள்ளது. கிலோ 150 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது.
சமீப காலமாக எத்திபான், கால்சியம் கார்பைடு ஆகியவற்றை பயன்படுத்தி, சில வியாபாரிகள் காய்களை கனிய வைத்து விற்கின்றனர். இதுவே சுவை குறைவுக்கு காரணம் என கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து சாப்பிட்டால், புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மேலும், நரம்பு மண்டலம் பாதித்தல், வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும்.
இதுபோன்ற நடக்காமல் இருக்க, கடைகளில் விற்பனை உள்ளவை இயற்கையாக பழுக்க வைத்த மாம்பழங்களாக என்பதை கண்டறிவது அவசியம்.ஆனால், அப்பணியை மேற்கொள்ள வேண்டிய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், ஆய்வு நடத்தாமல் வாய்மூடி மவுனியாக இருக்கின்றனர்.
அதற்கு காரணம், உணவு பாதுகாப்பு பணியில் அடுத்தடுத்து நடவடிக்கை எடுத்த, அத்துறையின் சென்னை மாவட்ட நியமன அலுவலர் சதீஷ்குமார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தான் என, அத்துறையினர் கூறுகின்றனர்.
கோடை காலம் துவங்கியப்போது, 'தர்பூசணியில் செயற்கை ரசாயனம் கலக்கப்படுவதால், உடல்நலம் பாதிக்கப்படும். எனவே, கலப்பிடமில்லாத தர்பூசணியை கண்டறிந்து வாங்கி சாப்பிட வேண்டும்' என, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சதீஷ்குமார் வீடியோவை வெளியிட்டார்.
இந்த வீடியோவால், தர்பூசணி விற்பனை குறைந்து, விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். எனவே, அவருக்கு எதிராக விவசாயிகள், வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேபோல், சென்னை அண்ணா சாலை மற்றும் திருவல்லிக்கேணியில் உள்ள, 'பிலால்' ஹோட்டலில் ஷவர்மா சாப்பிட்ட, 30க்கும் மேற்பட்டோர் உடல்நிலை பாதிக்கப்பட்டனர்.
இதில் அண்ணா சாலை பிலால் ஹோட்டலில் ஆய்வுக்கு சென்றபோது, உடல்நிலையை காரணம் காட்டி திடீரென திரும்பினார். உயர் அதிகாரிகள் கொடுத்த அழுத்தம் காரணமாகவே, அவர் ஆய்வு செய்யாமல் திருப்பியதாக, குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், சதீஷ்குமார், பொது சுகாதாரத்துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இன்னும் எந்த பணி என்று அறிவிக்கப்படவில்லை.
அதேநேரம், திருவள்ளூர் மாவட்ட நியமன அலுவலர் ஜெகதீஷ் சந்திரபோஸ், சென்னை மாவட்டத்திற்கு கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டார். தற்போது, சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட அதிகாரியாக, அவர் பணியாற்றி வருகிறார்.
தன் கடமையை செய்தற்காக, சதீஷ்குமார் தண்டிக்கப்பட்டதால், மற்ற துறை அதிகாரிகள் பணி செய்ய தயக்கம் காட்டி வருகின்றனர்.
அதனால், ரசாயனம் கலந்த மாம்பழங்கள் விற்பனை அதிகரித்துள்ளது. தவிர, கோடை கால தேவையை கருதி, சுகாதாரமற்ற குடிநீர், 10 ரூபாய் மதிப்பிலான செயற்கை குளிர்பானங்கள் என, உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பொருட்களின் விற்பனையும் அதிகரித்து உள்ளது.
இதை தொடர்ந்து உட்கொள்ளும் பொதுமக்களுக்கு பல உடல் உபாதைகள் ஏற்படும் அபாயம் உள்ளது. உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளின் தயக்கத்தை உடைத்து, உரிய ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க, அரசு முடுக்கிவிட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவ்வப்போது சோதனை
சதீஷ்குமார் மீதான நடவடிக்கைக்குப் பின், எங்கள் அனைவருக்கும் ஒரு அச்சம் ஏற்பட்டது உண்மை தான். பிரபலமான ஹோட்டல்களில் சோதனை செய்யவோ, தர்பூசணி, மாம்பழம் உள்ளிட்டவற்றின் தரத்தை உறுதி செய்யவோ தயக்கமாக உள்ளது. அதேநேரம், புகாரின் அடிப்படையில் மட்டும், அவ்வப்போது சோதனை செய்து வருகிறோம்.
- உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்,
சென்னை மாவட்டம்
- நமது நிருபர் -