புளியந்தோப்பு, சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் செல்வி, 40. இவர், கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், தலைமை காவலராக பணியாற்றி வந்தார்.
இவரது கணவர் நல்லுசாமி, மானாமதுரை தாலுகாவில் ஊராட்சி துணை தலைவராகவும், ரவுடியாகவும் உள்ளார். இவர்களுக்கு, ஒரு மகன் உள்ளார்.
இந்நிலையில், நேற்று காலை, செல்வி பணிக்கு வராத நிலையில், அவரை தொடர்பு கொண்ட போது, போன் அழைப்பையும் எடுக்கவில்லை.
அவர் தங்கியுள்ள புளியந்தோப்பு காவலர் குடியிருப்பின் கதவும் உட்புறமாக தாழிடப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து, புளியந்தோப்பு போலீசார், வீட்டின் கதவை உடைத்து பார்த்த போது, துப்பட்டாவால் துாக்கிட்டு செல்வி இறந்து கிடந்தார்.
உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில், செல்வியின் கணவர் அடிக்கடி ரவுடியிசம் செய்து, போலீசில் மாட்டுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
சிவகங்கையில், சில நாட்களுக்கு முன் நடந்த கொலை சம்பவத்தில், நல்லுசாமிக்கு தொடர்பு இருப்பது குறித்து, செல்விக்கும் நல்லுசாமிக்கும் போனில் வாக்குவாதம் நடந்தது. இதனால், அவர் தற்கொலை செய்ததாக, போலீசார் தெரிவித்துள்ளனர்.