/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கல் குவாரி சுத்திகரிப்பு நிலைய பணி இறுதிக்கட்டம் திரிசூலத்தில் இருந்து விரைவில் குடிநீர் வினியோகம்
/
கல் குவாரி சுத்திகரிப்பு நிலைய பணி இறுதிக்கட்டம் திரிசூலத்தில் இருந்து விரைவில் குடிநீர் வினியோகம்
கல் குவாரி சுத்திகரிப்பு நிலைய பணி இறுதிக்கட்டம் திரிசூலத்தில் இருந்து விரைவில் குடிநீர் வினியோகம்
கல் குவாரி சுத்திகரிப்பு நிலைய பணி இறுதிக்கட்டம் திரிசூலத்தில் இருந்து விரைவில் குடிநீர் வினியோகம்
ADDED : ஜன 20, 2024 12:55 AM
பல்லாவரம், பல்லாவரம் மண்டலத்தில், கோடை குடிநீர் பிரச்னையை தீர்க்க, கல்குவாரி தண்ணீரை சுத்திகரிப்பு செய்து வினியோகிக்கும் திட்டத்தில், மூவரசம்பேட்டை தொடர்ந்து, திரிசூலம் கல் குவாரி சுத்திகரிப்பு மையம் விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.
தாம்பரம் மாநகராட்சியில் பல்லாவரம், பம்மல், அனகாபுத்துார், சிட்லப்பாக்கம், திருநீர்மலை பகுதிகளுக்கு, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் மெட்ரோ மூலம் குடிநீர் பெறப்பட்டு வினியோகிக்கப்படுகிறது.
மற்ற பகுதிகளில், உள்ளூர் ஆதாரம் மூலம் தண்ணீரை உறிஞ்சி, சுத்திகரிப்பு செய்து வழங்குகின்றனர். அதே நேரத்தில், குடிநீருக்காக, மாநகராட்சிக்கு ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் செலவாகிறது.
இதனால், பல்லாவரம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, மூவரசம்பட்டு, திரிசூலம் பகுதிகளில் உள்ள கல் குவாரி தண்ணீரை சுத்திகரிப்பு செய்து, பல்லாவரம் மண்டல மக்களுக்கு வினியோகிக்க திட்டமிடப்பட்டது.
தொடர்ந்து, மூவரசம்பேட்டை, திரிசூலம் பகுதிகளில் உள்ள மூன்று கல் குவாரி பள்ளங்கள் தேர்வு செய்யப்பட்டு, அதன் தண்ணீரை எடுத்து 'கிங் இன்ஸ்டிடியூட்' மையத்திற்கு அனுப்பப்பட்டன.
ஆய்வில், குடிப்பதற்கு உகந்தது என முடிவு வந்ததை அடுத்து, மூன்று பள்ளங்களிலும், 12.50 கோடி ரூபாய் செலவில், சுத்திகரிப்பு மையங்கள் அமைக்கும் பணி 2023ல் துவங்கியது.
மூவரசம்பேட்டையில் பணிகள் முடிந்து, 2023 மார்ச்சில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு, அங்கிருந்து தினமும் 10 லட்சம் லிட்டர் குடிநீர், கச்சேரி மலை நீர்த்தேக்க தொட்டியில் நிரப்பி, சுற்றியுள்ள பகுதிகளுக்கு வினியோகிக்கின்றனர்.
ஆனால், மற்ற இரண்டு குவாரிகளை அதிகாரிகள் அப்படியே விட்டு விட்டனர். தற்போது, அதிகாரிகள் மாற்றப்பட்டதை தொடர்ந்து, மீண்டும் சுத்திகரிப்பு மையம் அமைக்கும் பணி வேகமெடுத்துள்ளது. திரிசூலம் கல் குவாரி - 1ல் பணிகள் முடிந்து, ஓரிரு நாட்களில் சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது.
கல் குவாரி-2ல் பணிகள் நடந்து வருகின்றன. இரண்டு இடங்களிலும் விரைவில் சுத்திகரிப்பு மையம் கட்டும் பணி முடிந்து, குடிநீர் திட்டம் பயன்பாட்டிற்கு வரும் என்று, அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.