ரூ.200 கோடி கடன் வாங்கியும் சி.எம்.டி.ஏ.,வுக்கு நிதி நெருக்கடி! கைவிடப்படும் வடசென்னை வளர்ச்சி திட்டங்கள்
ரூ.200 கோடி கடன் வாங்கியும் சி.எம்.டி.ஏ.,வுக்கு நிதி நெருக்கடி! கைவிடப்படும் வடசென்னை வளர்ச்சி திட்டங்கள்
UPDATED : ஜூலை 15, 2026 12:54 AM
ADDED : ஜூலை 14, 2026 11:13 PM

சென்னை: கடந்த ஆட்சிக்காலத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை தொடர, தமிழக அரசிடம், 200 கோடி ரூபாய் கடன் வாங்கியும், ஒப்பந்ததாரர்களுக்கு பணம் கொடுக்க முடியாமல், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ., கடும் நிதி நெருக்கடியில் திணறி வருகிறது. இதன் காரணமாகவும், ஒப்பந்த குளறுபடிகளாலும், 4,500 கோடி ரூபாய் மதிப்பிலான வடசென்னை வளர்ச்சி திட்டங்கள் முடக்கப்பட்டு உள்ளன.
சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., சார்பில், கட்டட அனுமதி வழங்குவது, 'மாஸ்டர் பிளான்' எனப்படும் முழுமை திட்டங்களை உருவாக்குவது, பெரிய அளவிலான கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்துவது வழக்கம்.
கட்டமைப்பு
ஆனால், கடந்த ஆட்சிக்காலத்தில் எம்.எல்.ஏ.,க்கள் கோரிக்கை, வட சென்னை வளர்ச்சி திட்டம் என்ற பெயர்களில், அதிக அளவில் கட்டமைப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
இதில், வடசென்னை வளர்ச்சி திட்டம், 1,000 கோடி ரூபாயில் அறிவிக்கப்பட்டது, 6,300 கோடி ரூபாயாக உயர்ந்தது. இதுதவிர, எம்.எல்.ஏ.,க்கள் கோரிக்கை அடிப்படையிலான திட்டங்கள், 1,000 கோடி ரூபாய்க்கு அறிவிக்கப்பட்டன.
இத்திட்டங்களுக்கு கடந்த ஆட்சிக்காலத்தில், 3,900 கோடி ரூபாய், சி.எம்.டி.ஏ.,வின் இருப்பு நிதி பயன்படுத்தப்பட்டது. அதன் பின், புதிய டெண்டர்கள் விட, சி.எம்.டி.ஏ.,வில் கட்டட அனுமதி வாயிலாக கிடைக்கும் நிதியை பயன்படுத்த திட்டமிடப்பட்டது.
இந்நிலையில், கடந்த ஆட்சிக்காலத்தில் டெண்டர் விடப்பட்ட பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள தேவையான நிதி, சி.எம்.டி.ஏ.,விடம் இல்லை. இதனால், செய்வதறியாமல் சி.எம்.டி.ஏ., நிர்வாகம் திணறி வருகிறது.
இதுகுறித்து, நகரமைப்பு வல்லுநர்கள் கூறியதாவது:
உள்ளாட்சி அமைப்புகள், அரசின் பிற துறைகள் மேற்கொள்ள வேண்டிய கட்டமைப்பு பணிகளை இழுத்து போட்டு கொண்டதால், சி.எம்.டி.ஏ.,வுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுஉள்ளது.
நிர்வாக மற்றும் தொடர் செலவுக்காக இருப்பில் வைக்கப்பட்டிருந்த, 3,900 கோடி ரூபாய், கடந்த ஆட்சிக்காலத்தில் காலி செய்யப்பட்டு விட்டது. இதனால், கடந்த ஆட்சிக் காலத்திலேயே, இதற்கு மேல் ஒப்பந்ததாரர்களுக்கு பணம் கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டது.
இதற்காக, தமிழக அரசிடம் இருந்து, 200 கோடி ரூபாய் நிதியை சி.எம்.டி.ஏ., கடனாக பெற்றது.
குழப்பம்
இந்த நிதி பெற்றும் பிரச்னைகள் தீராததால், ஒப்பந்தம் விடப்பட்ட பணிகள் பாதியில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, அறிவிக்கப்பட்ட நிலையில் இருந்த மதிப்பு, டெண்டர் முடிவு செய்யும்போது பலமடங்காக உயர்த்தப்பட்டதே குழப்பத்துக்கு காரணம்.
முடிக்கப்பட்ட திட்டங்களுக்கு பணம் கேட்டு ஒப்பந்ததாரர்களால் சி.எம்.டி.ஏ.,வுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
வடசென்னை வளர்ச்சி திட்டத்தில் நிலுவையில் உள்ள, 4,500 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இத்திட்டங்களை ஏற்று செயல்படுத்துமாறு அரசின் பிற துறைகளுக்கு, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் கடிதம் எழுதி உள்ளனர். இதனால், சி.எம்.டி.ஏ.,வின் சிறிய கட்டமைப்பு திட்ட பணிகள் மொத்தமாக முடிவுக்கு வந்துள்ளன.
கடந்த ஆட்சிக்காலத்தில் ஒப்பந்தங்கள் விட்டதில் நடந்த குளறுபடிகள் குறித்து முறையான விசாரணை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
