/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
10 வகை விதிமீறல்களுக்கு அபராதம் :போக்குவரத்து போலீசாருக்கு உத்தரவு
/
10 வகை விதிமீறல்களுக்கு அபராதம் :போக்குவரத்து போலீசாருக்கு உத்தரவு
10 வகை விதிமீறல்களுக்கு அபராதம் :போக்குவரத்து போலீசாருக்கு உத்தரவு
10 வகை விதிமீறல்களுக்கு அபராதம் :போக்குவரத்து போலீசாருக்கு உத்தரவு
ADDED : டிச 23, 2025 04:57 AM
சென்னை: போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதம் விதிப்பதில் சற்று தளர்வு அளிக்கப்பட்டு இருந்த நிலையில், 10 வகையான சாலை விதிமீறல்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, போக்குவரத்து போலீசாருக்கு, உயர் அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
சென்னையில் போக்குவரத்து போலீசார் ஆங்காங்கே கும்பலாக நின்று கொண்டு, இருசக்கர வாகன ஓட்டிகளை விரட்டிப்பிடிக்காத குறையாக மடக்கி, விதிமீறல்கள் என, அபராதம் விதித்து, 'கெடுபிடி' காட்டி வந்தனர்.
இது, பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில், போலீசார் மூன்று பேருக்கு மேல் கூட்டமாக நிற்கக்கூடாது என, போலீஸ் அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
மேலும், அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், 'ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுதல், 'நோ என்ட்ரி' என, அனுமதி இல்லாத வழிகளில் வாகனம் விட்டு ஓட்டுதல், மது அருந்தி வாகனம் ஓட்டுதல், இரு சக்கர வாகனத்தில் இரண்டு பேருக்கு மேல் செல்லுதல் என, ஐந்து விதிமீறல்களுக்கு மட்டும் அபராதம் விதித்தால் போதும் என, அறிவுறுத்தப்பட்டது. இதன்படி, போக்குவரத்து போலீசார் செயல்பட்டு வந்தனர்.
இந்நிலையில், போக்குவரத்து காவல் துறை உயர் அதிகாரி, 10 வகையான விதிமீறல்களுக்கும் அபராதம் விதிக்கும்படி நேற்று, புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அதன்படி, மதுஅருந்தி வாகனம் ஓட்டுதல், அதிவேகமாக வாகனம் இயக்குதல், இரு சக்கர வாகனத்தில் கூடுதல் ஆட்கள் செல்வது, நோ என்ட்ரியில் வாகனம் இயக்குதல், சீருடையின்றி ஆட்டோ ஓட்டுதல், நோ பார்க்கிங் பகுதியில் வாகனம் நிறுத்தினால் அபராதம் விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேபோல், கண்ட இடங்களில் வாகனம் நிறுத்துதல், போலீசாரின் இழுவை வாகனங்கள் வாயிலாக மீட்கப்பட்ட வாகனங்கள், விதிமுறைக்கு மாறாக நம்பர் பிளேட் உட்பட, 10 வகையான விதிமீறல்களுக்கும் தினமும் அபராதம் விதிக்க வேண்டும் என, அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

